சியோனி: மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் ஆயுதப்படை வீரர்களை அழைத்துச் சென்ற பேருந்து, எதிரில் வந்த கார் மீது வேகமாக மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். 25 வீரர்கள் காயமடைந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
“வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிறப்பு ஆயுதப்படை 35-வது பட்டாலியனைச் சேர்ந்த 26 வீரர்களை ஏற்றி வந்த பேருந்து மாண்டலாவிலிருந்து பான்டுர்னா நகருக்கு சென்றுகொண்டிருந்தது. பின்னிரவு 1 மணி அளவில் சியோனி- மாண்டலா மாநில நெடுஞ்சாலையைப் பேருந்து கடக்க முயன்றபோது எதிரில் வேகமாக வந்த காருடன் மோதியது,” என்று கேவ்லாரி காவல்துறையினர் கூறினர்.
கார் மீது மோதியதில் வீரர்களின் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. அதில் 26 வீரர்கள் காயம் அடைந்தனர். காயங்களுடன் உயிர் தப்பிய அனைவரும் கேவ்லாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

