தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லியில் குழந்தைகளை விற்கும் கும்பல் கைது

2 mins read
9398e210-3caf-4def-b7bf-c2666cc143ff
மீட்கப்பட்ட குழந்தையை அதிகாரி ஒருவர் எடுத்துச் செல்கிறார். - படம்: இந்திய ஊடகம்

புதுடில்லி: டெல்லியில் பச்சிளங் குழந்தைகளை கடத்தி, ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த கும்பலை சிபிஐ அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ஏழு குழந்தைகள் மீட்கப்பட்டன.

டெல்லியில் பச்சிளங் குழந்தைகள் பிறந்த உடனே கடத்தப்படுவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வந்தது.

இதன் தொடர்ச்சியாக, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பல குழுக்களாக சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை அன்று (ஏப்ரல் 6) அதிரடிச் சோதனை நடத்தினர்.

கேசவ்புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கிருந்து ஏழு குழந்தைகளை மீட்டனர்.

குழந்தைகளை விற்க முயன்ற பெண்களும் வாங்க வந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.

கும்பலிடமிருந்து 5.5 லட்சம் ரூபாய், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகளை கும்பல் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

அது மட்டுமின்றி ஏழை பெற்றோரிடம் பேசி, அவர்களுக்கு கணிசமான தொகையை வழங்கி, குழந்தைகளை வாங்கி, விற்பதையும் இந்த கும்பல் வழக்கமாக செய்து வந்ததாக சி.பி.ஐ., அதிகாரிகள் கூறினர்.

குழந்தைகளை விற்பனை செய்ய சமூக ஊடகங்களை கும்பல் பயன்படுத்தி வந்துள்ளது.

பிறந்த பச்சிளங் குழந்தைகள் 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை விற்கப்பட்டது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கைது செய்யப்பட்ட மருத்துவமனையில் பணியாற்றி வந்த வார்டு பாய் மற்றும் சில பெண்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்