ராகுல்: தேர்தல் பத்திரம் உலகின் மிகப்பெரிய ஊழல்

ராகுல்: தேர்தல் பத்திரம் உலகின் மிகப்பெரிய ஊழல்

2 mins read
c880eeec-b17a-4730-b83a-4d0e1c8325fd
ராகுல் காந்தி ஏப்ரல் 6ஆம் தேதி ஹைதராபாத் நகரில் தேர்தல் பிரசாரத்தின்போது தொண்டர் ஒருவர் கொடுத்த தன்னுடைய புகைப்படத்தைப் பெற்றுக் கொள்கிறார். - படம்: ஏஎஃப்பி

ஹைதராபாத்: தேர்தல் நன்கொடை பத்திரம், உலகின் ஆகப் பெரிய ஊழலாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி சாடியுள்ளார்.

தோ்தல் ஆணையத்தில் தனக்கு சாதகமான நபா்களை நியமித்து தோ்தல் நன்கொடை பத்திரம் என்ற உலகின் மிகப்பெரிய ஊழலை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு அரங்கேற்றியிருப்பதாக அவர் புகார் கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் சனிக்கிழமை அன்று ராகுல் காந்தி தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது இக்கருத்தை வெளியிட்டார்.

“ஒவ்வொரு நாளும் சராசரியாக முப்பது விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனா். ஆனால் கோடீஸ்வரா்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த பிரதமா் மோடி விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்கூட தள்ளுபடி செய்யவில்லை.

“பிரதமராக மோடி பதவியேற்றபின் நாட்டில் கோடிக்கணக்கானோா் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனா் என்றார் ராகுல்.

“மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியமைத்தால் காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘விவசாயிகளுக்கான நீதி’ என்ற வாக்குறுதியின்படி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம் வழங்கப்படும்.

“தெலுங்கானா மாநிலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றி வருகிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சியமைத்ததில் இருந்து தற்போது வரை 30,000 அரசுப் பணிகள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 50,000 அரசுப் பணிகள் விரைவில் நிரப்பப்படவுள்ளன,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சார்பில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, சுதந்திர போராட்டக் காலத்தில் நமது முன்னோர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்களின் தியாகத்தால் இந்தியா சுதந்திரமடைந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்தது. ஆனால் கடந்த பத்து ஆண்டுக்கால பாஜக ஆட்சியால் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

“இந்த நாடு ஒரு சிலரின் சொத்து கிடையாது. அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டை விட, தன்னை உயர்ந்தவராக கருதுகிறார்,” என்று சோனியா காந்தி கூறினார்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்