ஜம்மு-காஷ்மீரில் குலாம் நபியை எதிர்த்து மெகபூபா முப்தி போட்டி

2 mins read
96ec7ad6-7f2d-47e8-b0f2-043e4afb1ead
ஜம்மு-காஷ்மீர், அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் மெகபூபா முப்தியை எதிர்த்து, ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் (டிபிஏபி) தலைவர் குலாம் நபி ஆசாத் போட்டியிடுகிறார். - படம்: இந்திய ஊடகம்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கும் 5 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீர், அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி போட்டியிடுகிறார்.

அந்தத் தொகுதியில் 2004, 2014ஆம் ஆண்டு தேர்தல்களில் வென்றவர் முப்தி. ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதே தனது தலையாய கடமை என்று தெரிவித்துள்ளார்.

இவரை எதிர்த்து ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டிபிஏபி) சார்பில் அதன் தலைவர் குலாம் நபி ஆசாத் போட்டியிடுகிறார். மேலும், ஸ்ரீநகர் தொகுதியில் இருந்து வஹீத் பாரா, பாரமுல்லாவில் இருந்து பயாஸ் மிர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

உதம்பூர், ஜம்மு ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக பிடிபி தெரிவித்துள்ளது.

“மாநில அந்தஸ்து இல்லாமல் யூனியன் பிரதேசமாக இருப்பது மிகப்பெரிய பிரச்சினை. 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டபோது அதனை எதிர்த்து மாநிலங்களவையில் முதல் குரல் எழுப்பினேன். தற்போது மக்களவையிலும் போராட விரும்புகிறேன். அதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன். மக்களவையில் எனது முதல் போராட்டம் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காகவே இருக்கும்,” என்றார் அவர்.

முப்திதான் ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதலமைச்சர். இவர் கடந்த 2016ல் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றினார். ஆனால், 2018ல் இவருக்கான ஆதரவை பாஜக திரும்ப பெற்றுக்கொண்டது. எனவே ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எனவே, இந்த தேர்தலில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடையும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

பாஜக தவிர, காங்கிரஸ் , ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு (ஜேகேஎன்சி), மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு (ஜேகேபிசி), ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டிபிஏபி) ஆகிய கட்சிகளும் களத்தில் இருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்