தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
இந்திய தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக பெரும் தொகை, பொருள்கள் பறிமுதல்

ரூ.4,650 கோடி மதிப்புள்ள நகை, பணம், மதுபானங்கள் பறிமுதல்

2 mins read
935fd95b-30a8-44d1-a74a-a3dda142af0e
ஸ்ரீ ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையம், ஸ்ரீ ஞானேஷ் குமார், ஸ்ரீ சுக்பீர் சிங் சந்து ஆகியோருடன் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் முதல் கட்ட வாக்கெடுப்புக்கான நடவடிக்கைளை மேற்பார்வையிட்டு வருகிறது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் 75 ஆண்டு கால பொதுத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான ரொக்கமும் பொருள்களும் கைப்பற்றப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மார்ச் 1ஆம் தேதி முதல் ஒவ்வொருநாளும் 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை (ஏப்ரல் 15) ஆணையம் கூறியது.

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் முன் நாடு முழுவதும் ரூ.4,650 கோடி மதிப்புள்ள மதுபானம், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று ஆணையம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இதில், ரொக்கம், ரூ.395.39 கோடி, மதுபானங்கள் ரூ.489.31 கோடி, போதைப்பொருள்கள் ரூ.2,068.85 கோடி, இலவசப் பொருட்கள் ரூ.1,142.49 கோடி.

அதிகபட்சமாக ராஜஸ்தானில் ரூ. 778 கோடி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் 605 கோடி மதிப்புள்ள மதுபானம், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. 3வது இடத்தில் தமிழகம் உள்ளது.

முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டில் மட்டும் மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ரூ.460 கோடி மதிப்புள்ள நகை, பணம், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரொக்கம் ரூ.53 கோடி, போதைப்பொருள்கள் ரூ.293 கோடி, தங்கம், வெள்ளி பொருட்கள் ரூ.78 கோடி, மதுபானங்கள் ரூ.4.4 கோடி, இலவசப் பொருட்கள் ரூ.31 கோடி ஆகும்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது நாடு முழுவதும் ரூ.3,475 கோடி பறிமுதலானது. இந்நிலையில் தற்போது ரூ.4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.2,500 கோடி மதிப்பில் மதுபானங்கள் மற்றும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய நடவடிக்கை இது என தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

நீலகிரியில் பறக்கும் படை குழுவின் தலைமை பொறுப்பாளரை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்பாளரின் வாகனத்தை முறையாக சோதனை செய்யவில்லை எனப் புகார் எழுந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்