இண்டியா கூட்டணியிடம் தொலைநோக்குப் பார்வை இல்லை: மோடி

இண்டியா கூட்டணியிடம் தொலைநோக்குப் பார்வை இல்லை: மோடி

2 mins read
d29f2869-4762-4ae2-a3fc-c529728c9937
கயா நகரில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி. - படம்: ஏஎஃப்பி

பீகார்: இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பீகார் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

கயா நகரில் நடைபெற்ற அந்தப் பிரசாரத்தில், மோடி “இண்டியா கூட்டணிக்கு தொலைநோக்குப் பார்வையும் இல்லை, நம்பிக்கையும் இல்லை” என்று விமர்சனம் செய்தார்.

“நமது அரசியலமைப்புச் சட்டம் தூய்மையானது. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வளமான இந்தியாவை உருவாக்க கனவு கண்டனர். ஆனால், நாட்டை பலமுறை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி இந்தியாவின் முழு வளர்ச்சியைத் தடுத்தது.

“பாஜக அரசு எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடவில்லை. அதன் காரணமாகத்தான், நாட்டில் 25 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஏழைகளுக்கு மூன்று கோடி வீடுகள் கட்டித் தரப்படும்.

“70 வயது நிரம்பியவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் பிரதமர் நிதிதிட்டம் தொடரும்,” என்று மோடி கூறினார்.

இண்டியா அணியிடம் எந்த சாதனையும் இல்லை. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் செய்த பணிகளைச் சொல்லித்தான் அவர்கள் வாக்கு கேட்கிறார்கள்,” என்று மோடி குற்றஞ்சாட்டினார்.

“பாஜக தேர்தல் அறிக்கையில், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும், ஒவ்வொரு துறைக்கும் ஒரு திட்ட வரைபடம் உள்ளது. நாட்டில் 10 கோடி பெண்கள் சுய உதவி குழுக்களுடன் இணைந்துள்ளனர். பீகார் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தங்கள் அரசு ரூ.40,000 கோடிக்கு மேல் நிதி வழங்கியுள்ளது,” என்றார் மோடி.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தேர்தல் அறிக்கை சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் பல திட்டங்களை அக்கட்சி அறிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்