வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதே எங்கள் வேலை: ராகுல் காந்தி

வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதே எங்கள் வேலை: ராகுல் காந்தி

2 mins read
62a80223-b7dc-4c67-9fe6-e0fdbddcf34f
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் புதன்கிழமை (ஏப்ரல் 17) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். - படம்: இபிஏ

லக்னோ: ஊழலின் சாம்பியன் பிரதமர் மோடி என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தியும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டாக புதன்கிழமை (ஏப்ரல் 17) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது ராகுல் காந்தி கூறுகையில், “நாட்டில் வேலையின்மையும், பணவீக்கமும் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளன. ஆனால், இதனைப் பற்றி பேசாமல் மக்களை பாஜகவும் பிரதமரும் திசைதிருப்புகிறார்கள்.

“தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் அரசியலைத் தூய்மைப்படுத்தவும் வெளிப்படைத் தன்மைக்காகவும் கொண்டுவரப்பட்டதாக மோடி கூறுகிறார். அது உண்மை என்றால் உச்ச நீதிமன்றம் ஏன் அந்தப் பத்திரங்கள் பெறுவதை ரத்து செய்ய வேண்டும்.

“வெளிப்படைத்தன்மைக்காக கொண்டு வரப்பட்டது என்றால் பாஜகவுக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயரை வெளியிடாதது ஏன்?

“பணம் கொடுக்கப்பட்ட தேதியை மறைத்தது ஏன்?. உலகத்திலேயே மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது; மிரட்டிப் பணம் பறிக்கப்பட்டுள்ளது. எல்லாத் தொழிலதிபர்களும் இதை அறிவார்கள்.

“பிரதமர் எவ்வளவு தெளிவுபடுத்த நினைத்தாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஏனெனில், பிரதமர் ஊழலின் சாம்பியன் என்று நாட்டில் உள்ளவர்கள் அறிவார்கள்.

“பாஜக 180 இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்தேன், ஆனால் தற்போதைய நிலவரப்படி 150 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும்.

“அனைத்து மாநிலங்களிலும் எங்களுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் எங்கள் கூட்டணி பலமாக உள்ளது.

“அதானி போன்ற முதலாளிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதே எங்களின் முதல் பணியாக இருக்கும்,” என்று ராகுல் காந்தி கூறினார்.

குறிப்புச் சொற்கள்