மோடி அலை என்பது மாயை: பாஜக வேட்பாளரே கூறுகிறார்

2 mins read
c4c67947-bd0a-4368-bb07-c3673f5b7194
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதி பாஜக வேட்பாளர் நவ்நீத் ரானா. - படம்: இந்திய ஊடகம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதி பாஜக வேட்பாளர் நவ்நீத் ரானா ‘மோடி அலை’ இல்லை எனப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

அவரது கருத்தை வைத்து மகாராஷ்டிராவின் என்சிபி (சரத் பவார் பிரிவு), சிவசேனா (யுபிடி) பிரிவு கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

கடந்த திங்கட்கிழமை அமராவதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமராவதி தொகுதி பாஜக வேட்பாளர் நவ்நீத் ரானா, “நாம் இத்தேர்தலை ஒரு கிராமப் பஞ்சாயத்து தேர்தல் போல் கருதி பணிகளைச் செய்ய வேண்டும்.

“நண்பகல் 12 மணிக்குள் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்துவிட வேண்டும். அவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

“மோடி அலை இருக்கிறது என்ற மாயையில் இருந்துவிட வேண்டாம். மோடி அலை இருந்தும்கூட கடந்த முறை நான் சுயேச்சையாக வெற்றி பெற்றேன் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்,” என்று பேசியிருந்தார்.

அவர் பேச்சு அடங்கிய காணொளி தற்போது வெளியாகி வைரலாகி மகாராஷ்டிர அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நவ்நீத் ரானா 2019 மக்களவைத் தேர்தலில் என்சிபி ஆதரவோடு சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெற்றார். இந்த முறை அவர் பாஜகவில் இணைந்து அக்கட்சி வேட்பாளராக களம் காண்கிறார்.

இவரது கருத்தைக் குறிப்பிட்டு சிவசேனா உத்தவ் பால் தாக்கரே பிரிவு செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவுத் கூறுகையில், “மோடி அலையை மறந்துவிடுங்கள். மோடி அவருடைய தொகுதியில் வெற்றி பெறுவாரா என்பதே பெரிய கேள்விதான்,” என்றார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதி பாஜக வேட்பாளர் நவ்நீதி ரானா.

குறிப்புச் சொற்கள்