தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சத்தீஸ்கரில் 29 நக்சல்கள் சுட்டுக்கொலை

2 mins read
60f34ac4-8385-4a8e-a509-7e10760a665e
காயமடைந்த பாதுகாப்புப் படை வீரர் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். - படம்: இந்திய ஊடகம்

காங்கேர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 29 நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக எல்லைப் பாதுகாப்புப் படை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், “சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியின் காங்கேர் மாவட்டம், பினாகுண்டா, கொரோனார் கிராமங்களுக்கு இடையே எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறை சிறப்புப் படையினர் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

“மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் சிலர் அப்பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து இந்தத் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

“பிற்பகல் 2 மணியளவில் அங்குள்ள ஹபடோலா காட்டுப் பகுதிக்கு பாதுகாப்புப் படையினர் சென்றபோது அங்கு மறைந்திருந்த நக்சல் தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

“இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினரும் பதிலடித் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை மூண்டது.

“இதில் தாக்குப் பிடிக்க முடியாத நக்சல்கள் படிப்படியாக பின்வாங்கி தப்பியோடினர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் சோதனை நடத்திய பாதுகாப்புப் படையினர், துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த 29 நக்சல்களின் உடல்களை மீட்டனர். இந்த மோதலில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர்.

“மோதல் நடைபெற்ற பகுதியில் இருந்து 7 ஏ.கே.ரக துப்பாக்கிகள், 3 இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள், வெடிபொருள்கள் என ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தப்பியோடிய நக்சல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

“கொல்லப்பட்ட நக்சல்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதில் அந்த அமைப்பின் முக்கியத் தலைவர்களும் இருக்கலாம் என்று தெரிகிறது,” என்று அறிக்கை தெரிவித்தது.

சத்தீஸ்கரின் பஸ்தர் பிராந்தியம் நக்சல் ஆதிக்கம் அதிகமுள்ள இடமாகும்.

பஸ்தர் மக்களவைத் தொகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்பு பிஜாபூர் மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி 13 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்