தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சல்மான்கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்த சந்தேக நபர்களுக்கு ரூ. 4 லட்சம் தரப்படவிருந்ததாகத் தகவல்

1 mins read
3f896449-8b21-410d-8dd1-ba9db0b62ba4
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. - படம்: ஏஎஃப்பி

மும்பை: பிரபல இந்திப் பட நடிகர் சல்மான்கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற விவகாரத்தில் மேலும் ஒரு சந்தேக நபர் புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) கைதுசெய்யப்பட்டார்.

அந்நபர், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நம்பப்படும் 24 வயது விக்கி குப்தா, 21 வயது சாகர் குமார் பாலக் ஆகியோருக்கும் லாரன்ஸ் பி‌ஷ்னோய் கும்பலுக்கும் இடையே தொடர்பாக இருந்தார் என்று காவல்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. விக்கி குப்தா, சாகர் குமார் பாலக் இருவரும் காவல்துறை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அச்சம்பவம் நடப்பதற்கு சில மணிநேரத்துக்கு முன்னர் சாகர் குமார் பாலக்கிடம் துப்பாக்கி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தத் துப்பாக்கி சனிக்கிழமை (ஏப்ரல் 13) இரவு மும்பையின் பாந்த்ரா பகுதியிலிருந்து அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

துப்பாக்கிச்சூட்டை நடத்துவதற்குக் கட்டணமாக பாலக், விக்கி குப்தா இருவருக்கும் நான்கு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் காவல்துறைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14) அதிகாலை பாந்த்ரா பகுதியில் சல்மான் கான் வசிக்கும் கேலக்சி அடுக்குமாடி கட்டடத்துக்கு வெளியே நிகழ்ந்தது. மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் ஐந்து முறை சுட்ட பிறகு அவ்விடத்திலிருந்து தப்பியோடினர்.

குஜராத் மாநிலத்தின் குட்ச் வட்டாரத்தில் உள்ள கோயில் ஒன்றில் சாகர், விக்கி குப்தா இருவரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 15) இரவு மும்பை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாக சல்மான்கான் வகைப்படுத்தப்பட்டுள்ளார். மும்பை குற்றப் பிரிவு அவரின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாதிரைச்செய்தி