மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் அமலுக்கு வரும்: டி.கே.சிவக்குமார்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் அமலுக்கு வரும்: டி.கே.சிவக்குமார்

2 mins read
1fd5dd62-7fb9-40e5-ad61-ebb3657d8ad6
கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார். - படம்: ஊடகம்

பெங்களூரு: மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கர்நாடகத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஏன் மக்கள் வாக்களிக்க வேண்டும்? என்று வினவியவர், “மத்தியில் 10 ஆண்டுகாலம் ஆட்சி நடத்திய அந்தக் கட்சி, தான் கூறியபடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

“வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு அதை மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வைப்புத்தொகையாகச் செலுத்தப்படும் எனப் பிரதமர் மோடி கூறினார். அதைச் செய்தாரா?

“ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என உறுதியளித்தார். அதன்படி வழங்கப்பட்டதா?

“விவசாயிகளின் வருவாய் அவர் கூறியபடி இரு மடங்காக உயர்த்தப்பட்டதா?

“நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, மேகதாது திட்டத்திற்காகப் போராட்டம் நடத்தினோம். இதற்குப் பணிந்து ஆட்சியில் இருந்த பாஜக ரூ.1,000 கோடி ஒதுக்கியது.

“பெங்களூருவில் குடிநீர்ப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் ஆழ்துளைக் கிணறுகள் வறண்டுவிட்டன.

“மேகதாது திட்டத்தை அமல்படுத்தினால் பெங்களூருவுக்கு குடிநீர் வழங்கமுடியும். மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ‘இண்டியா கூட்டணி’ ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற்று அதை அமல்படுத்துவோம்.

“இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும் பயன் கிடைக்கும். இதற்கு ஆட்சேபனை இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக வழக்கறிஞர்கள் கூறினர். உச்ச நீதிமன்றம் இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளது,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்