முதன்முறையாக தேர்தலில் வாக்களிக்கும் வாய் பேச முடியாத காஷ்மீர் சகோதரிகள்

1 mins read
4a10a3a7-d50a-456f-8dd8-2c1a10a7dc3d
தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்திய வாய் பேச முடியாத மூன்று காஷ்மீர் சகோதரிகள். - படம்: ஊடகம்

தோடா: காஷ்மீரைச் சேர்ந்த வாய் பேச முடியாத மூன்று சகோதரிகள் முதன்முறையாக தேர்தலில் வாக்களிப்பதாக தெரிவித்ததை அடுத்து, பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரின் உதம்பூர் தொகுதியில் வெள்ளிக்கிழமை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது.

இங்குள்ள தோடா மாவட்டத்தில் உள்ள கந்தோ கிராமத்தில் 105 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களில் பலர் வாய் பேச முடியாதவர்கள் என ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

“இப்பகுதியில் வசிக்கும் 55 குடும்பங்களைச் சேர்ந்தவர் களில் பலர் காது கேளாத, வாய் பேச முடியாதோர் ஆவர். 43 பெண்கள், பத்து வயதுக்கு உட்பட்ட 14 குழந்தைகள் என மொத்தம் 84 காது கேளாத, வாய் பேச முடியாதோர் உள்ளனர்,” என்று இந்து தமிழ் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கந்தோ கிராமத்தைச் சேர்ந்த ரேஷ்மா பானோ (24 வயது), பர்வீன் கவுசர் (22), சைரா கதூன் (20) ஆகிய மூன்று சகோதரிகளும் வெள்ளிக்கிழமையன்று தங்களுடைய வாக்குகளைச் செலுத்த ஆர்வமாக இருப்பதாகக் கூறினர்.

மூவரும் வெள்ளிக்கிழமை வாக்களிப்பது வரவேற்கத்தக்க நிகழ்வு என காஷ்மீர் மக்கள் தெரிவித்தனர்.

முன்னதாக தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இச்சகோதரிகள் சைகை மொழியில் பேசி ஊர் மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்