உலகின் ஆகக் குள்ளமான பெண் ஜனநாயகக் கடமையை ஆற்றினார்

1 mins read
122e7057-dffa-4f6c-b60d-c25ea46543dc
மையிட்ட தம் சின்னஞ்சிறு கைவிரலை ஊடகங்களிடம் பெருமையுடன் காண்பிக்கும் ஜோதி கிஷாஞ்சி ஆம்கே. - படம்: ஐஏஎன்எஸ்

நாக்பூர்: உலகின் ஆகக் குள்ளமான பெண்ணான ஜோதி கிஷாஞ்சி ஆம்கே, இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) காலை மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்குச் சென்றார்.

62.8 செ.மீ. உயரமுடைய ஜோதியை அவருடைய குடும்ப உறுப்பினர்கள் தங்கள் கைகளில் ஏந்தி வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்றனர்.

வாக்களிப்பு நிலையத்துக்கு ஜோதி சென்றவுடன் புகைப்படக்காரர்கள் அவரைச் சூழ்ந்தனர்.

“மக்களவைத் தேர்தலில் நான் வாக்களிப்பது இது இரண்டாவது முறை. வாக்களிப்பு எனது ஜனநாயகக் கடமையாகும்,” என்று வாக்களித்துவிட்டு ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறிய ஜோதி, மையிட்ட தம் சின்னஞ்சிறு கைவிரலை ஊடகங்களிடம் பெருமையுடன் காட்டினார்.

2011 டிசம்பர் 16ஆம் தேதி தமது 18வது பிறந்தாளில் கின்னஸ் உலகச் சாதனையால் உலகின் ஆகக் குள்ளமான பெண்ணாக ஜோதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்