நடிகை ஷில்பா ஷெட்டி, கணவரின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

நடிகை ஷில்பா ஷெட்டி, கணவரின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

1 mins read
3360dc9e-cfee-4635-8305-61a5b699e07a
கணவர் ராஜ் குந்த்ராவுடன் ஷில்பா ஷெட்டி. - படம்: ஊடகம்

மும்பை: மின்னிலக்க (பிட்காயின்) பண மோசடி தொடர்பான வழக்கில் சிக்கியுள்ள இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோரின் ரூ.98 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு பிட்காயின் முதலீடு தொடர்பாக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு பொது மக்களிடம் இருந்து ரூ.6,600 கோடி வசூலித்து மோசடி செய்ததாக வேரியபில் டெக் நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு மூளையாகச் செயல்பட்ட அமித் பரத்வாஜ் என்பவரிடமிருந்து, நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் குந்த்ரா 285 பிட்காயின் வாங்கினார் என்று புகார் எழுந்தது.

மேலும், உக்ரேனில் அவர் பிட்காயின் மையம் அமைக்க திட்டமிட்டிருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையின்போது ராஜ்குந்த்ரா 285 பிட்காயின்களை தன்வசமே வைத்திருப்பது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.150 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இருவருக்கும் சொந்தமான ரூ.98 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில் ஷில்பா ஷெட்டிக்குச் சொந்தமான வீடு, ராஜ் குந்த்ரா பெயரில் புனேயில் உள்ள பங்களா, அவரது பங்குச் சந்தை முதலீடுகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்
நிதி மோசடி

தொடர்புடைய செய்திகள்