ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு பின்னணியில் சிக்கிய ‘கர்னல்’ : பாகிஸ்தானின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு பின்னணியில் சிக்கிய ‘கர்னல்’ : பாகிஸ்தானின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்

2 mins read
b97b1bf8-a961-4fd1-92f4-b55b1b779cc5
குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், என்ஐஏ அதிகாரிகள். - கோப்புப் படம்: ஊடகம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருக்கலாம் என தேசியப் புலனாய்வு முகவை (என்ஐஏ) அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவின் ஒயிட்ஃபீல்டில் இயங்கி வருகிறது ராமேஸ்வரம் கஃபே உணவகம். இந்த உணவகத்தில் மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக அப்துல் மதீன் தாஹா, முசாவிர் ஹுசைன் ஷாஜிப் ஆகியோரை கோல்கத்தாவின் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில், குற்றவாளிகள் இருவருக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளது தெரியவந்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் கூறியுள்ளனர். குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட அப்துல் மதீன் தாஹா, உணவகத்தில் வெடிகுண்டை வெடிக்க வைத்த முசாவிர் ஹுசைன் ஷாஜிப் ஆகியோர் பாகிஸ்தானின் ‘கர்னல்’ என்ற குறியீட்டுப் பெயருடன் தொடர்புடையவர்கள் என்பதும் தங்களது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் மேலும் கூறினர். அதுமட்டுமின்றி 2019ஆம் ஆண்டு முதல் அவர்கள் ‘ஐஎஸ்-அல்-ஹிந்த்’ என்ற பயங்கரவாத அமைப்போடு தொடர்பில் இருந்து வந்துள்ளதாகவும் என்ஐஏவுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, ராமேஸ்வரம் கஃபே உணவக குண்டுவெடிப்பு வழக்கில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். “கடந்த 2022ஆம் ஆண்டு மங்களூரில் ஆட்டோ ரிக்‌ஷாவில் இதேபோன்று குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நடந்தது. இந்த சம்பவத்தின் போது நாங்கள் ‘கர்னல்’ என்ற பெயரைக் கேள்விப்பட்டோம். “இப்போது நாங்கள் கைது செய்திருக்கும் அப்துல் மதீன் அகமது தாஹா, முசாவிர் ஹுசைன் ஷாசிப் இருவரும் கர்னலுடன் தொடர்பில் இருந்திருக்கின்றனர். “கர்னல் மத்திய கிழக்கில் இருந்து செயல்பட்டு வருகிறார். குறிப்பாக அபுதாபியிலிருந்து இயங்கி வருகிறார்.

“அவருக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது,” என பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த விசாரணை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்