தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொய் விளம்பரம்: பொது மன்னிப்பு கேட்க பாபா ராம்தேவுக்கு உத்தரவு

2 mins read
161e3f68-5abb-41c7-bc3d-cab2522231e3
பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தயாரிக்கும் பொருள்களால் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் வெளியிட்ட விளம்பரங்களில் கூறப்படுவது உண்மையன்று என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

கொச்சி: பொய் விளம்பரங்களை வெளியிட்டதற்காக இந்தியாவில் உள்ள பிரபல யோகாசன குருவும் ஆயுர்வேத வர்த்தகப் பெருஞ்செல்வந்தருமான பாபா ராம்தேவ் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தயாரிக்கும் பொருள்களால் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் வெளியிட்ட விளம்பரங்களில் கூறப்படுவது உண்மையன்று என்று தெரிவிக்கப்பட்டது.

அத்தகைய விளம்பரங்கள் இனி வெளியிடப்படாது என்று 2023ஆம் ஆண்டில் பாபா ராம்தேவ் உறுதி அளித்தார்.

ஆனால் கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றவில்லை என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடங்கியது.

பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் வெளியிட்ட விளம்பரங்கள் தொடர்பாக இந்திய மருத்துவச் சங்கம் வழக்கு தொடுத்ததை அடுத்து, 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இதுகுறித்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இச்சங்கம் இந்தியாவில் உள்ள மருத்துவர்களைப் பிரதிநிதிக்கிறது.

பில்லியன் டாலர் மதிப்புள்ள பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், நவீன மருத்துவம் மற்றும் மருந்துகளைத் தாழ்த்தும் வகையில் விளம்பரங்களை வெளியிடுவதாக சங்கம் அதிருப்திக் குரல் எழுப்பியது.

அதுமட்டுமல்லாது, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தயாரிக்கும் மருந்துகள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் என்று அதன் விளம்பரங்கள் அடித்துக் கூறுவது முறையல்ல என்றும் சங்கம் நீதிமன்றத்திடம் முறையிட்டது.

இத்தகைய விளம்பரங்களை வெளியிடுவது இந்தியச் சட்டத்துக்கு எதிரானது.

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் வெளியிட்டுள்ள குறைந்தது 30 விளம்பரங்களைச் சங்கம் மேற்கோள் காட்டியுள்ளது. அவை பொய்த் தகவலைப் பரப்புவதாக அது குற்றம் சாட்டியது.

கொவிட்-19 நெருக்கடிநிலை உச்சத்தில் இருந்தபோது, அந்நோயைக் குணப்படுத்தும் மருந்து தம்மிடம் இருப்பதாகக் கூறி, ‘கொரோனில்’ எனும் மருந்தை பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்தது.

அந்த விளம்பரத்தில் பாபா ராம்தேவ் முகக்கவசமின்றி தோன்றினார்.

குறிப்புச் சொற்கள்