கடும் கட்டுப்பாடுகளால் களையிழந்த திருச்சூர் பூரம் விழா

1 mins read
acd81fd6-bece-4434-8961-ede6f5eb2823
திருச்சூர் பூரம் விழாவில் பிரம்மாண்டமாக அணிவகுத்து நிற்கும் பட்டத்து யானைகள். - கோப்புப்படம்: கேரளா சுற்றுலாத்துறை

திருச்சூர்: கேரளாவில் ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதி ( சனிக்கிழமை) நடைபெற்ற அம்மாநிலத்தின் மிகப் பெரிய கலாசார திருவிழாவான திருச்சூர் பூரம் விழா கடுமையான காவல்துறையின் கட்டுப்பாடுகளால் களையிழந்தது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் விதித்திருந்த தடையால், ஏப்ரல் 19ம் தேதி இரவு நடந்த பூரம் விழாவின் சில நிகழ்ச்சிகள் பாதியில் கைவிடப்பட்டது.

தவிர, பூரம் திருவிழா வரலாற்றில் முதல்முறையாக ஏப்ரல் 20ஆம் தேதி, திருவிழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றான வாணவேடிக்கை அன்றைய தினம் பகல் நேரத்தில் நடைபெற்றது. இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஏற்படுள்ள அரசியல் பாதிப்பை தணிக்கும் வகையில், திருச்சூர் காவல்துறை ஆணையர் அங்கித் அசோக், உதவி ஆணையர் கே சுதர்சன் ஆகியோரை தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் இடமாற்றம் செய்யுமாறு, காவல்துறை தலைமை இயக்குநருக்கு பினராயி விஜயன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேரள முதல்வர், தேர்தல் நேரத்தில் அரசு இயந்திரத்திற்கு வரம்புகள் உள்ளன. இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.

குறிப்புச் சொற்கள்