320ஐ எட்டிய ரத்த சர்க்கரை அளவு: திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி

320ஐ எட்டிய ரத்த சர்க்கரை அளவு: திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி

படம்: ஊடகம்

23 Apr 2024 - 8:39 pm

2 mins read

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஊசி மூலம் இன்சுலின் செலுத்தப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குத் தொடர்பில் முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீரிழிவு நோயாளியான கெஜ்ரிவால், சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக அவருக்கு இன்சுலின் ஊசி, வீட்டில் சமைத்த உணவு போன்றவற்றை வழங்க சிறை நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கெஜ்ரிவாலை சிறையில் கொலை செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், இதை சிறை நிர்வாகம் மறுத்து உள்ளது. இதனிடையே, தனது உடல்நிலை தொடர்பாக ஆலோசனை பெற தனது மருத்துவருடன் காணொளி சந்திப்பின்மூலம் பேசுவதற்கு அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். அதேநேரம் கெஜ்ரிவாலுக்கு ரத்தத்தில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இன்சுலின் ஊசி அவசியமா என்பதை ஆய்வு செய்யவும்அவரது பிற உடல்நல பிரச்சினைகளை பரிசோதிக்கவும் மருத்துவக்குழு ஒன்றை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, கெஜ்ரிவாவின் சர்க்கரை அளவு 320ஐ தாண்டியதால் அவருக்கு இன்சுலின் ஊசி ஞாயிற்றுக்கிழமை இரவு செலுத்தப்பட்டது.

கெஜ்ரிவால் சிறை சென்ற பின்னர் வழங்கப்படும் முதல் இன்சுலின் ஊசி இது என்பதை திகார் சிறை நிர்வாகமும் உறுதி செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்