தரத்தைச் சரிபார்க்குமாறு மசாலா தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்தியா வலியுறுத்து

தரத்தைச் சரிபார்க்குமாறு மசாலா தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்தியா வலியுறுத்து

1 mins read
295ece27-0ace-4985-b76f-478aab207a78
ஸ்ரீநகரில் உள்ள ஒரு கடையில் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலா அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெங்களூரு/ஹைதராபாத்: இந்தியாவின் மசாலா ஏற்றுமதி ஒழுங்குமுறை ஆணையம் எம்டிஎச், எவரெஸ்ட் இரு நிறுவனங்களிடம் தரப் பரிசோதனை குறித்த விவரங்களை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

புற்றுநோயை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லி வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்ததாகக் கூறப்பட்டதால், அந்நிறுவனங்களின் சில தயாரிப்புகளின் விற்பனை ஹாங்காங்கில் நிறுத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்தியாவில் பிரபலமாக உள்ள அந்நிறுவனங்களின் தயாரிப்புகள் ஐரோப்பா, ஆசியா, வடஅமெரிக்காவில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஹாங்காங் இந்த மாதம் மூன்று எம்டிஎச் மசாலா கலவைகள், எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவின் விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை மீட்டுக்கொள்ள உத்தரவிட்ட சிங்கப்பூர் உணவு அமைப்பு, அதை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியது.

அந்தத் தயாரிப்பில் ‘எத்லின் ஆக்சைட்’ அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்ததால் அதை மீட்டுக்கொள்ள உத்தரவிடப்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு ஏப்ரல் 18ஆம் தேதி தெரிவித்திருந்தது.

அதிக அளவில் ‘எத்லின் ஆக்சைட்’ மனிதர்கள் உட்கொள்வதற்கு உகந்ததல்ல என்று ஹாங்காங், சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளில் தரப் பரிசோதனை நடத்துமாறு இந்திய உணவு அதிகாரிகள் திங்கட்கிழமை (ஏப்ரல் 22) உத்தரவிட்டிருந்தனர்.

மசாலா தயாரிப்புகள் எவ்வாறு பரிசோதிக்கப்பட்டன, அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டனவா என்பது பற்றி விளக்கமளிக்க எம்டிஎச், எவரெஸ்ட் இரு நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாக இந்திய மசாலா தயாரிப்பு வாரியத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
எவரெஸ்ட்உணவுமீட்பு