தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தானிய பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை

2 mins read
b34fd394-eefb-48da-a370-f9224f7a3ad7
இந்தியாவில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஆயி‌ஷா ரா‌ஷான். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயி‌ஷா ரா‌ஷான் எனும் 19 வயது பெண் மாற்று இதயத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதியன்று இந்தியாவின் சென்னை நகரில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆயி‌ஷாவுக்கு மறுவாழ்வு தந்தனர். மூளை செயலிழந்துபோன 69 வயது நோயாளி ஒருவரின் இதயத்தை மருத்துவர்கள் ஆயி‌ஷாவுக்குப் பொருத்தினர்.

இந்தியத் தலைநகர் டெல்லியில் இருக்கும் ஒரு மருத்துவமனையிலிருந்து ஆயி‌ஷாவுக்கான இதயம் தருவிக்கப்பட்டது.

முதலில் மாரடைப்பு ஏற்பட்டபோது ஆயி‌ஷா 2019ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். அதற்குப் பிறகு அவரின் இதயம் செயலிழந்துபோனது.

அந்தக் காலகட்டத்தில் சென்னையின் அடையார் பகுதியில் உள்ள மலர் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் கே ஆர் பாலகிரு‌ஷ்ணன் எனும் மருத்துவர் ஆயி‌ஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்தார். மாற்று இதயத்தைப் பெறுவதற்கான காத்திருப்புப் பட்டியலில் அவரின் பெயர் சேர்க்கப்பட்டது.

பின்னர் ஆயி‌ஷாவின் இதயத்தை இயங்க வைக்க சில சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் பாகிஸ்தானுக்குத் திரும்பினார்.

ஆனால் 2023ல் ஆயி‌ஷாவுடைய இதயத்தின் வலது புறமும் செயலிழந்துபோனது. அவருக்கு அழற்சியும் ஏற்பட்டது.

அவரைக் குணப்படுத்த இதய மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே வழி என்று டாக்டர் பாலகிரு‌ஷ்ணனின் குழு தெரிவித்தது.

பிறகு மாற்று இதயம் கிடைத்தது. 69 வயது நபரின் இதயத்தை ஆயி‌ஷாவுக்குப் பொருத்த மருத்துவர்கள் தயங்கியதாக டாக்டர் கே ஜி சுரே‌ஷ் எனும் மருத்துவர் சொன்னார். எனினும் அவரின் இதயம் நல்ல நிலையில் இருந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து முடிந்தது. கட்டணத்துக்கான தொகையை ஈட்டும் முயற்சியில் ஐஸ்வர்யா அறக்கட்டளை எனும் அரசாங்க சார்பற்ற அமைப்பு ஈடுபட்டது. நோயாளிகளாக இருந்தவர்கள், முன்னாள் மருத்துவர்கள் மற்றும் ஆயி‌ஷாவின் குடும்பத்தார் பணம் திரட்டி கட்டணம் செலுத்தினர்.

“இப்போது என்னால் எளிதில் மூச்சு விட முடிகிறது,” என்று ஆயி‌ஷா டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் கூறினார். “கராச்சியில் எனது கல்வியை முடிக்கத் திட்டமிட்டுள்ளேன். நான் நவீன அலங்கார வடிவமைப்பாளராகப் பணியாற்ற விரும்புகிறேன்,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்