அமேதியில் ராபர்ட் வதேரா ஆதரவு சுவரொட்டிகள் அகற்றம்; காங்கிரஸ் தொண்டர்கள் குழப்பம்

அமேதியில் ராபர்ட் வதேரா ஆதரவு சுவரொட்டிகள் அகற்றம்; காங்கிரஸ் தொண்டர்கள் குழப்பம்

2 mins read
699f4f9c-bbf6-487d-a899-032e73e99bd6
ராகுலின் மைத்துனரும் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேராவை ஆதரித்து அமேதி தொகுதியில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் திடீரென அகற்றப்பட்டதையடுத்து தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர். - படம்: ஊடகம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இதுவரை நடைபெற்ற 16 மக்களவைத் தேர்தல்களில் 13 முறை காங்கிரஸ் கட்சி அங்கு வெற்றி பெற்றுள்ளது. மூன்று முறை மட்டுமே பிற கட்சிகள் வென்றுள்ளன.

இதில், 11 தேர்தல்களில் நேரு-காந்தி குடும்பத்தினர் நாடாளுமன்ற உறுப்பினராகி உள்ளனர். இங்கு 2004 முதல் போட்டியிட்டு, மூன்று முறை வென்ற ராகுல் காந்தி, 2019-ஆம் ஆண்டில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார், எனினும் அவர் மற்றொரு தொகுதியான கேரளாவின் வயநாட்டில் வெற்றிபெற்றார்.

ராகுல் காந்தி இந்தமுறை மீண்டும் வயநாட்டில் போட்டியிடுகிறார். ஆனால் அமேதி குறித்து காங்கிரஸ் எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது.

இந்நிலையில், ராகுலின் மைத்துனரும் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இச்சூழலில், அமேதியில் நேற்று அவருக்கு ஆதரவான சுவரொட்டிகள் காணப்பட்டன. ஆனால் இந்த சுவரொட்டிகள் அடுத்த சில மணி நேரத்தில் அகற்றப்பட்டு விட்டன.

உ.பி.யில் காங்கிரசுக்கு மீதமுள்ள ஆதரவு அமேதி, ரேபரேலியில் மட்டுமே காணப்படுகிறது. இதை தக்கவைக்கும் வகையில் வேட்பாளர்கள் கட்சி இன்னும் அறிவிக்காதது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று காங்கிரஸ் நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அமேதி தொகுதியில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாதது காங்கிரஸ் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வயநாடு வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை முடிந்த பிறகு ராகுலின் பெயர் அமேதி தொகுதிக்கு அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபோல் சோனியா 2004 முதல் தொடர்ந்து ஐந்து முறை வென்ற ரேபரேலியில் பிரியங்கா போட்டியிடுவார் என திர்பார்க்கப்படுகிறது. அமேதி, ரேபரேலியில் 5ஆம் கட்ட தேர்தல் நாளான மே 20-ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

குறிப்புச் சொற்கள்