தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய நாடாளுமன்றத் தேர்தல்- இரண்டாம் கட்ட வாக்களிப்பு தொடங்கியது

2 mins read
630ac5fc-a38e-42e0-b83d-ecb0551374da
கேரளாவில் உள்ள சாலக்குடி தொகுதியில், செயிண்ட் ஜோசஃப் உயர்நிலைப்பள்ளியில் வரிசையில் நின்று வாக்களிக்கும் வாக்காளர்கள். கேரளத்தில் உள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளில் 194 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். - படம்: இந்திய ஊடகம்

கோட்டயம்: இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்களிப்பு ஏப்ரல் 26ஆம் தேதியன்று தொடங்கியது.

மொத்தம் ஏழு கட்டங்களாக நடத்தப்படும் வாக்களிப்பில் ஏறத்தாழ ஒரு பில்லியன் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஏப்ரல் 19ஆம் தேதியன்று தொடங்கி ஜூன் 1ஆம் தேதியன்று நிறைவுபெறும்.

ஜூன் 4ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும்.

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா கட்சி இலக்கு கொண்டுள்ளது.

இம்முறையும் மிக எளிதில் அறுதிப் பெரும்பான்மையுடன் மோடி வெற்றி பெறுவார் என்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்திய நாடாளுமன்றத்தில் மொத்தம் 543 தொகுதிகள் உள்ளன.

அவற்றில் 88 தொகுதிகளுக்கான வாக்களிப்பு ஏப்ரல் 26ஆம் தேதியன்று நடத்தப்படுகிறது.

இந்த இரண்டாம் கட்ட வாக்களிப்பில் வாக்களிக்க 160 மில்லியன் பேர் தகுதி பெற்றுள்ளனர்.

13 மாநிலங்கள், கூட்டரசுப் பிரதேசங்களில் இந்த இரண்டாம் கட்ட வாக்களிப்பு நடைபெறுகிறது.

இந்த 88 தொகுதிகளில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான தொகுதிகள் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேரும்.

தென்னிந்தியாவில் உள்ள கேரளா, கர்நாடகா முக்கியத் தேர்தல் களங்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பாரதிய ஜனதாக கட்சி மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

அதனுடைய இந்த இலக்கை எட்ட அக்கட்சி கேரளாவிலும் கர்நாடகாவிலும் தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும்.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசிடம் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்தபோதிலும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற அது முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் அக்கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இம்முறை திருச்சூரில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகப் போட்டியிடுகிறார்.

அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி கூறுகிறது.

அதுமட்டுமல்லாது, கேரளாவில் மேலும் பல தொகுதிகளைக் கைப்பற்ற அது இலக்கு கொண்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மீண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்.

குறிப்புச் சொற்கள்