இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்: நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் எச்சரிக்கை

இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்: நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் எச்சரிக்கை

2 mins read
56047395-d2fc-450e-a37b-264a188db792
தகவல் பாதுகாப்பு முறையில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொழில்நுட்பத் துறைக்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது.

இந்தியாவில் செயல்பட விரும்பும் அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் புதிய விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று இந்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்நிலையில் ‘எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்; எனப்படும் தகவல் பாதுகாப்பு முறையை நீக்க கட்டாயப்படுத்தினால் இந்தியாவில் இருந்து வெளியேற நேரிடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த புதிய சட்டத்திற்கு எதிராக வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

“வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் தகவல் பாதுகாப்பு முறையை நீக்க இந்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால், நாட்டை விட்டே இச்செயலி வெளியேற நேரிடும்,” என டெல்லி உயர்நீதி மன்றத்தில் அந்நிறுவனம் வாதம் செய்தது.

மேலும் தகவல் பாதுகாப்பு முறையில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

“புதிய விதிமுறைகளில் உள்ள சில சட்டங்களுக்கு இணங்கினால் தகவல் பாதுகாப்பு முறை இல்லாமல் போய்விடும், இது தனியுரிமையை மீறும் ஒரு செயல்,” என்று வாட்ஸ்அப் நீதிமன்றத்தில் கூறியது.

ஆபத்தான குறுந் தகவல்களைக் கண்டறிந்து இணையத்தில் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியம். ஒரு குறுந் தகவல்களை அனுப்பியவர் யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது என்று மத்திய அரசு சார்பில் வாதம் செய்யப்பட்டது.

தவறான தகவல்களை பரப்புபவர்கள் , வன்முறையை தூண்டுபவர்களை அடையாளம் காண உதவும் பொறுப்பு சமூக ஊடகங்களுக்கு இருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.

குறிப்புச் சொற்கள்