விறுவிறுப்பாக நடந்து முடிந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

விறுவிறுப்பாக நடந்து முடிந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

2 mins read
bf9ba901-4a76-4d96-b73a-fd556f89dc29
13 மாநிலங்கள், கூட்டரசுப் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கான வாக்களிப்பு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.  - படம்: இபிஏ
Google News Preferred Icon

கோட்டயம்: இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்களிப்பு ஏப்ரல் 26ஆம் தேதியன்று நடந்தது.

13 மாநிலங்கள், கூட்டரசுப் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கான வாக்களிப்பு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.

இந்த 88 தொகுதிகளில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான தொகுதிகள் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேரும். இரண்டாம் கட்ட வாக்களிப்பில் வாக்களிக்க 160 மில்லியன் பேர் தகுதி பெற்றுள்ளனர்.

கடும் வெப்பம் எனப் பாராமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.

இந்த நிலையில், கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவின் போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.

பாலக்காடு, கோழிக்கோடு, ஆலப்புழா, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

வன்முறை இல்லை:

கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவின்போது மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் மோதல்கள் நடந்தன. ஆனால் வெள்ளிக்கிழமை மாலை வரை எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் சமூக ஊடகங்கள் வழி தங்களது கருத்துகளையும் வாக்களித்த படங்களையும் பதிவிட்டனர்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஏப்ரல் 19ஆம் தேதியன்று தொடங்கி ஜூன் 1ஆம் தேதியன்று நிறைவுபெறும்.

ஜூன் 4ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும். இந்திய நாடாளுமன்றத்தில் மொத்தம் 543 தொகுதிகள் உள்ளன. 272 தொகுதிகளை வெல்லும் கூட்டணி கட்சி இந்தியாவை ஆட்சிசெய்யும்.

குறிப்புச் சொற்கள்