பீகாரில் கடத்தப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

பீகாரில் கடத்தப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

படம்: ஊடகம்

27 Apr 2024 - 8:21 pm

1 mins read

லக்னோ: பீகார் மாநிலத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சட்டவிரோதமாக அடுக்குப் பேருந்தில் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 95 குழந்தைகளை உத்தரப்பிரதேச குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்டுள்ள சிறுவர்கள் அனைவரும் 4 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எங்கு அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பது கூடத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பெற்றோரின் ஒப்புதலின்றி 95 குழந்தைகள் எதற்காகப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக ஒப்படைக்க குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து, சிறுவர்களின் பெற்றோர்களைத் தொடர்புகொண்டுள்ள காவல்துறையினர், அவர்களிடம் சிறுவர்களை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக அயோத்தி நகர குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் சர்வேஷ் அவஸ்தி கூறுகையில், “கோரக்பூரில் அயோத்தி செல்லும் வழியில் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குழந்தைகள் ஆணைய அதிகாரிகள் குழந்தைகளை ஏற்றி வந்த பேருந்தை நிறுத்தி குழந்தைகளை மீட்டனர். அவர்களுக்கு உணவு, மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைகள் 4 முதல் 12 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

“குழந்தைகளை அழைத்து வந்தவர்களிடம் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இல்லை. பெற்றோரைத் தொடர்புகொண்டு அவர்களது குழந்தைகளை ஒப்படைக்க உள்ளோம்,” என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
தேர்தல்