தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குஜராத், ராஜஸ்தானில் பெரிய அளவில் போதைப்பொருள் சிக்கியது: 13 பேர் கைது

2 mins read
ddb1f3d3-bbc5-407c-882b-8e72cef54c4c
குஜராத்தில் சோதனையின்போது முடக்கப்பட்ட போதைப்பொருள் தயாரிப்பு நிலையத்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் கண்டெடுப்பு. - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 3

அகமதாபாத்: இந்தியாவின் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் ரூ.230 கோடி மதிப்பிலான போதைப்பொருளை வைத்திருந்ததாக நம்பப்படும் 13 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையும் (ஏடிஎஸ்) போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவும் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஏடிஎஸ்ஸுக்குத் துப்பு கிடைத்த பிறகு வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 26) முறியடிப்பு நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. குஜராத்தின் அகமதாபாத் நகரவாசியான மனோகர்லால் எனானி என்பவரும் ராஜஸ்தானைச் சேர்ந்த குல்தீப்சிங் ராஜ்புரோஹித் என்பவரும் போதைப்பொருள் உற்பத்தி நிலையங்களை அமைத்ததாக சனிக்கிழமையன்று (ஏப்ரல் 27) வெளியிடப்பட்ட செய்தியாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

ராஜஸ்தானின் சிரோஹி, ஜோத்பூர் பகுதிகள், குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள பிப்லாஜ் கிராமம் உள்ளிட்டவற்றில் முறியடிப்பு நடவடிக்கைகள் நடத்தப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ராஜஸ்தானில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றில் போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டதற்காக எனானி ஏற்கெனவே ஏழு ஆண்டு சிறைத் தண்டனையை நிறைவேற்றியது விசாரணையில் தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் சந்தேக நபர்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் தொடர்புடையவர்கள் என்றும் அவர்கள் போதைப்பொருள் தயாரிப்புக்கான பொருள்களை குஜராத்தின் வல்சாத் வட்டாரத்தில் இருக்கும் வாப்பி தொழில்துறைப் பகுதியிலிருந்து பெற்றதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் எத்தனை காலம் போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கக்கூடும், அவர்கள் ஏற்கெனவே போதைப்பொருள் விற்றனரா, இதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கக்கூடுமா போன்ற விவரங்களை அறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் ஏடிஎஸ், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு இரண்டும் மேலும் சோதனைகளை நடத்திவருவதாகவும் கூடுதலான போதைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்