ஜார்க்கண்ட்டில் பறவைக் காய்ச்சல்; இறைச்சி, கோழி முட்டை விற்க தடை

2 mins read
d2053e55-5f32-4400-89c4-d7fe6d314438
ஜார்க்கண்ட்டில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிப் பண்ணைகளுக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகளைப் பிடித்து அழிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோழிகளுக்குப் பறவைக் காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிகிச்சை அளித்த இரண்டு கால்நடை மருத்துவர்கள் உட்பட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒடிசாவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருக்கலாம் என ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணைகளைச் சுற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்துப் பண்ணைகளின் கோழி, வாத்துகளை அழிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்தப் பகுதியில் கோழி இறைச்சி, கோழி முட்டைகளை விற்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான கோழிகளும் வாத்துகளும் அழிக்கப்பட்டன. பின்னர் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் தென்பட்டன.

இப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. அந்த மாநிலத் தலைநகர் ராஞ்சி அருகேயுள்ள கோழிப்பண்ணையில் எச்5என்1 வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டு, அங்குள்ள கோழிகள் அழிக்கப்பட்டு விட்டன.

பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர்கள் இரண்டு பேர் மற்றும் கோழி பண்ணையில் பணியாற்றிய 6 ஊழியர்கள் ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் பறவைக் காய்ச்சல் தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய சுகாதாரத் துறையிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜார்க்கண்ட்டில் பறவைக் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதைக் கட்டுப்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்