பாகிஸ்தான் படகில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது

பாகிஸ்தான் படகில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது

1 mins read
51745d61-e417-4d78-9da7-49ef8ed300ee
பாகிஸ்தானில் இருந்து ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் இந்தியாவுக்குள் நுழைந்த படகை கடலோரக் காவல்படையினர் முற்றுகையிட்டு 14 பாகிஸ்தானியர்களைக் கைது செய்தனர். - படம்: ஊடகம்

காந்திநகர்: குஜராத் கடல்பகுதியில் போதைப்பொருள் கடத்திவந்த பாகிஸ்தான் படகை கடலோரக் காவல் படையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அதிலிருந்து ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களைக் கைப்பற்றியதோடு படகில் இருந்த 14 பாகிஸ்தானியர்களையும் காவல் படையினர் கைது செய்தனர்.

பாகிஸ்தானில் இருந்து இந்திய கடல் எல்லை வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

கடந்த மார்ச் மாதத்தில் 60 போதைப்பொருள் பொட்டலங்களைப் படகில் கடத்தி வந்த பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் படகு ஒன்று குஜராத் கடற்பகுதியில் ஏராளமான போதைப் பொருள்களுடன் வருவதாக கடலோரக் காவல் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடலோரக் காவல் படை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி), குஜராத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து பாகிஸ்தான் படகை முற்றுகையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு படகைக் கைப்பற்றினர்.

படகிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் எடை ஏறக்குறைய 86 கிலோ என்றும் அதன் மதிப்பு ரூ.600 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோஹி, ஜோத்பூர் மற்றும் குஜராத்தின் காந்தி நகர், அம்ரேலியில் நடந்த அதிரடிச் சோதனையில் ரூ.230 கோடி மதிப்புள்ள 149 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்