காங்கிரசிற்கு வாக்களித்தால் பா.ஜ.க வெற்றி பெறும் - மம்தா பானர்ஜி

காங்கிரசிற்கு வாக்களித்தால் பா.ஜ.க வெற்றி பெறும் - மம்தா பானர்ஜி

2 mins read
b49355e7-46f3-479d-b500-aca0ae96d346
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி. - கோப்புப்படம்: ஊடகம்

கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக வரும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலையொட்டி மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், மால்டா மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், “மால்டாவில் எந்த மக்களவைத் தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெற்றதில்லை. இந்த நேரத்தில், நீங்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டும், ஏனெனில் இந்த இடங்களில் காங்கிரசுக்கும், இடதுசாரிகளுக்கும் வாக்களித்தால் பாஜக வெற்றி பெற்றுவிடும். இந்த இரண்டு கட்சிகளும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளன.

“திரிணாமூல் தொகுதிகளில் வெற்றி பெறாமல் பாஜக ஆட்சிக்கு வந்தால், அது சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி யை அறிமுகப்படுத்தி உங்களைத் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி விடுவர்.

“வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியால் ஒருபோதும் வெல்ல முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமது வாக்குகளைப் பிரிப்பதற்கு அவர்கள் இங்கு போட்டியிடுகிறார்கள். எனவே, காங்கிரசுக்கு எந்த அளவுக்கு அதிக வாக்குகள் கொடுக்கிறீர்களோ அந்த அளவுக்கு பா.ஜ.க தான் வலுவாகும். பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஒருபோதும் வாக்களிக்காதீர்கள்.

“காங்கிரசுக்கு சட்டசபையில் ஒரு இடம் இல்லை என்றாலும், அக்கட்சிக்கு இரண்டு தொகுதிகள் வழங்கி, சி.பி.எம் உடன் கைகோர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால், அவர்கள் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. இடதுசாரிகளுடன் கூட்டணியை உருவாக்க முன்வந்தனர். நான் ஒருபோதும் சி.பி.எம் முன் சரணடைய மாட்டேன்.

“அதே சமயம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஆட்சி அமைப்பதில் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். ஆனால் நீங்கள் மோடியை அவரது இருக்கையில் இருந்து வீழ்த்துவீர்கள் என்று உறுதியளிக்க வேண்டும்” எனக் கூறினார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட வாக்குப் பதிவுகள் முடிவுற்றன. மேற்கு வங்கத்தில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக வரும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

குறிப்புச் சொற்கள்