தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உ.பி. மக்களை ஈர்க்கும் அதிதியின் பேச்சு

2 mins read
bb241ba1-7042-487b-9b58-8076f837fe31
அகிலேஷ் யாதவ், டிம்பிள் யாதவ் தம்பதியரின் 21 வயது மகள் அதிதி அம்மாவுக்கு வாக்குக் கேட்டு பிரசாரம் செய்து வருகிறார். - படம்: ஊடகம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் சிங் யாதவின் மகள் அதிதி சிங் (21), தனது தாய் டிம்பிள் யாதவ் போட்டியிடும் மெயின்புரியில் அம்மாவுக்காக வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதன்மூலம் முலாயம் சிங் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை உ.பி. அரசியலில் களமிறங்கி உள்ளது

உ.பி. தேர்தல் பிரசாரத்தில், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மகள் அதிதி யாதவ் முக்கிய இடம் பிடித்துள்ளார். அதிதி செல்லும் இடங்களில் மக்கள் அவரைப் பார்க்க அதிகளவில் திரண்டு வருகின்றனர். அவர் தனது ஆணித்தரமான பேச்சுகளால் அதிகமானோரை தன் கூட்டத்திற்கு கவர்ந்து இழுக்கிறார். பாஜகவையும் மோடியையும் விமர்சிப்பதன் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். லண்டனில் படித்து வரும் அதிதி, விடுமுறை என்பதால் தனது தாய் டிம்பிள் யாதவுடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த தேர்தல் முடிவுகளில் அதிதியின் செல்வாக்கு எப்படி என்பதை பொறுத்து, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனது அரசியல் அத்தியாயத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகிலேஷுக்கு மனைவி டிம்பிள் மற்றும் அதிதி, டினா என்ற இரண்டு மகள்களும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர்.

அதிதியின் முதல்முறை பிரசாரம் குறித்து டிம்பிள் கூறுகையில், “கல்வி விடுமுறையில் இருக்கும் அதிதி எனக்கு உதவி செய்கிறார். மக்களிடையே பழகி அனைத்தையும் அறிவது அவசியம். அரசியல் அவ்வளவு சாதாரணமானது அல்ல என்பதை அவள் நேரடியாக தெரிந்துகொள்ள வேண்டும்,” என்றார்.

செய்தியாளர்களிடம் பேசுவதைத் தவிர்க்கும் அதிதி, லண்டனில் கல்வி பயில்கிறார். இவருடன் சமாஜ்வாடி மகளிர் பிரிவின் தேசிய துணைத்தலைவர் நிதி யாதவ் உடன் வருகிறார். இவர்தான், அதிதியை மெயின்புரியில் வீடுதோறும் அழைத்துச் செல்கிறார். தெருமுனைக் கூட்டங்களிலும் அதிதி மேடை ஏறி, அம்மா டிம்பிளுக்காக பிரசாரம் செய்து வருகிறார்.

அதிதி வரும் காலத்தில் உ.பி. தேர்தலில் போட்டியிட்டு முழுநேர அரசியலில் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு உ.பி.வாசிகளிடம் உள்ளது.

உ.பி.யில் இண்டியா கூட்டணி உறுப்பினர்களாக 62 தொகுதிகளில் சமாஜ்வாடி போட்டியிடுகிறது. காங்கிரஸ் 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மெயின்புரியில் மே 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியைத் தொடங்கி அதன் சார்பில் மூன்று முறை ஆட்சி செய்தவர் முலாயம் சிங் யாதவ். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது சகோதரர்கள், மகன்கள், மருமகள்கள் என பலரும் அரசியலில் இறங்கினர். இவர்களில் மகன் அகிலேஷ் சிங் யாதவ் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளார். உ.பி. முதல்வராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்