தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோடியை எதிர்த்து நகைச்சுவைக் கலைஞர் ஷ்யாம் ரங்கீலா போட்டி

2 mins read
56cbf318-7cdb-4a15-8455-e9925653a8fe
2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசியில் களமிறங்கப் போவதாக புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் ஷ்யாம் ரங்கீலா கூறியுள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

வாரணாசி: ராஜஸ்தானைச் சேர்ந்த ஷ்யாம் ரங்கீலா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போன்ற அரசியல்வாதிகளை மிமிக்ரி செய்து பிரபலமானவர்.

28 வயதாகும் இவரின் நையாண்டிகளால் ஒருகட்டத்தில் இவரது நிகழ்ச்சிக்கு 2017ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. 2014 தேர்தலின்போது பாஜகவை ஆதரித்த இவர், சில ஆண்டுகளில் மீண்டும் பாஜகவை எதிர்த்து நையாண்டி செய்ய ஆரம்பித்தார்.

இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் வாரணாசித் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

மேலும், சூரத் மற்றும் இந்தூர் போல் எதிர் வேட்பாளர்கள் இல்லாமல் பிரதமர் மோடி வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதற்காக அவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷ்யாம், “2014ல் பிரதமர் மோடியின் சீடனாக இருந்தவன் நான். அப்போது, பிரதமருக்கு ஆதரவாகவும், ராகுல் காந்தி மற்றும் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும் மிமிக்ரி காணொளிகளையும் பகிர்ந்துள்ளேன். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. எனவே, இனி வரும் மக்களவைத் தேர்தல்களில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவேன்,” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் காணொளியில், “நான் ஷ்யாம் ரங்கீலா. நகைச்சுவையாளன். உங்களுடன் எனது ‘மன் கி பாத்’ செய்யவே இந்தக் காணொளி. உங்கள் அனைவரின் மனதிலும் வாரணாசியில் ஷ்யாம் ரங்கீலா தேர்தலில் போட்டியிடுகிறார் என்ற செய்தி உண்மையா? இது நகைச்சுவையா? என்ற கேள்வி இருக்கலாம்

“இது நகைச்சுவை அல்ல. நான் வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிடுகிறேன். நான் ஒரு காரணத்திற்காகவே இதைச் செய்கிறேன். ஒருவருக்குப் பதிலளிக்க வேண்டுமானால், அவர்களுடைய சொந்த மொழியில்தான் பதிலளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அது புரியும். பிரதமருக்கு அவரது மொழியில் பதில் அளிப்பதற்காகவே வாரணாசிக்கு வருகிறேன். எனக்கு இதுவே முதல் தேர்தல். எனவே, என்னை ஆதரித்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த வாரம் வாரணாசி சென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்