தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆளுநர் மீது பாலியல் புகார்; மேற்கு வங்கத்தில் பரபரப்பு

2 mins read
6fc17fa6-6a3e-4f60-99bb-34147e091124
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்துள்ளது. அதை மறுத்த ஆளுநர், இதுபோன்ற கட்டுக்கதைகளுக்கு அஞ்சமாட்டேன் என்று கூறியுள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

கோல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்து ஆளுநர் மாளிகையில் தங்குவதற்குத் திட்டமிட்டுள்ள நிலையில், அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க ஆளுநர் தன்னைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, கோல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் தற்காலிக ஊழியரான பெண் ஒருவர் கோல்கத்தா ஹரே ஸ்திரீட் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்காலிகப் பணியாளரான பெண் ஒருவர், ஆளுநர் மாளிகையின் உள்ளே அமைந்துள்ள காவல் நிலையத்திற்குச் சென்று ஆளுநர் ஆனந்த போஸ் தன்னைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த காவல் அதிகாரி உடனடியாக ஹரே ஸ்திரீட் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக ஆளுநர் மாளிகைக்குச் சென்ற ஹரே ஸ்திரீட் காவல்துறை அதிகாரிகள், அந்தப் பெண்ணை பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்துள்ளனர். ஆளுநர் ஆனந்த போஸ் தனக்கு நிரந்தர வேலை வழங்குவதாகக் கூறி தன்னைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எழுத்துபூர்வமாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்க மாநிலத்திற்கு வருகைதரும் பிரதமர் நரேந்திர மோடி, கோல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமை இரவு தங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநர் ஆனந்த போஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் ஆதாயத்திற்காக வீண்பழி செலுத்தும் நோக்கில் கட்டமைக்கப்பட்ட இதுபோன்ற கதைகளுக்குப் பயப்பட மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பெண் உரிமைகள் குறித்து பேசிய ஆளுநர் ஆனந்த போஸ், இப்போது வெட்கக்கேடான சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி பஞ்சா விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகைக்குள் காவல்துறை அதிகாரிகள் நுழைவதற்கு ஆளுநர் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்