லாலு மகளுக்கு எதிராக ‘லாலு’ போட்டி

லாலு மகளுக்கு எதிராக ‘லாலு’ போட்டி

2 mins read
d0b407b9-52d3-4e61-ad6f-75938e720be7
பீகாரின் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவின் இரண்டாவது மகள் ரோகிணி ஆச்சார்யா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்தின் இரண்டாவது மகள் ரோகிணி ஆச்சார்யாவுக்கு (44 வயது) எதிராக லாலு பிரசாத் யாதவ் என்ற வேட்பாளர் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

லாலு பிராத்தின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ்பிரதாப் யாதவ், மூத்த மகள் மிசா பாரதி ஆகியோர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் ரோகிணி ஆச்சார்யாவும் தற்போதைய மக்களவைத் தேர்தல் மூலம் அரசியலில் களமிறங்கி உள்ளார்.

பீகாரின் சரன் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளராக அவர் போட்டியிடுகிறார். ரோகிணி ஆச்சார்யா தனது தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தபோது தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கியவர்.

முன்னாள் ஒன்றிய அமைச்சரான பாஜக வேட்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடிக்கும் ரோகிணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் சரன் மக்களவைத் தொகுதியில் லாலு மகள் ரோகிணிக்கு எதிராக ஆர்ஜேபி என்ற கட்சியின் சார்பில் ரோகிணியின் தந்தையின் பெயரைக்கொண்ட லாலு பிரசாத் யாதவ் என்ற வேட்பாளர் போட்டியிடுகிறார்.

சரன் மாவட்டம், ரஹீம்பூரை சேர்ந்த அவர், தற்போது 13வது முறையாக சரன் மக்களவைத் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இவர், 2014ஆம் ஆண்டில் லாலு மனைவி ராப்ரி தேவிக்கு எதிராகப் போட்டியிட்டார்.

இப்போது லாலுவின் மகள் ரோகிணிக்கு எதிராகப் போட்டியிடுகிறார். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தேர்தலில் போட்டியிடுவதாக லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரோகிணி, கடந்த திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு ரூ.2.99 கோடி அசையும் சொத்துகளும், ரூ.12.82 கோடி அசையா சொத்துகள் உட்பட ரூ.15.82 கோடிக்கு சொத்துகள் இருப்பதாகக் கூறி உள்ளார். அவரது கணவருக்கு ரூ.19.86 கோடி சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரொக்கமாக கையில் ரூ.20 லட்சமும் கணவரிடம் ரூ.10 லட்சம் இருப்பதாகவும் ரோகிணி கூறி உள்ளார். சரண் தொகுதியில் மே 20 ஆம் தேதி 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

குறிப்புச் சொற்கள்