தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் பரவிய இந்தியத் தேர்தல் காய்ச்சல்

2 mins read
da824d8d-246d-486b-a886-2ee61a1fb4dc
லண்டனில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது பாரதிய ஜனதா கட்சிக்கும் ஆதரவாகக் களமிறங்கிய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள். - படம்: எக்ஸ் தளம்

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது.

ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய வாக்களிப்பு, ஜூன் 1ஆம் தேதி நிறைவடையும்.

இந்நிலையில், தேர்தல் காய்ச்சல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் பரவியுள்ளது.

லண்டனில் உள்ள பிக் பென்னுக்கு அருகில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது பாரதிய ஜனதா கட்சிக்கும் ஆதரவாக இந்தியர்கள் பலர் கூடினர்.

பாரதிய ஜனதா கட்சியின் கொடியை அசைத்தபடி அவர்கள் அக்கட்சிக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.

“இம்முறை 400க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றுவோம்,” என்று அவர்கள் அனைவரும் உரக்கத் தெரிவித்தனர்.

இந்திய நாடாளுமன்றத்தில் மொத்தம் 543 இடங்கள்.

லண்டனில் ஏப்ரல் 28ஆம் தேதியன்று ‘ரன் ஃபார் மோடி’ எனும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்க பிரிட்டனில் வாழும் இந்தியர்கள் பலர் ஒன்று கூடினர்.

இந்த ஒன்றுகூடலுக்கு ‘ஒவர்சீஸ் ஃபிரண்ட்ஸ் ஆஃப் பிஜேபி’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த அமைப்பு பாரதிய ஜனதா கட்சி சார்பாக வெளிநாடுகளில் பிரசாரம் செய்து வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் கட்சிகள் இந்தியாவில் உள்ள தமது வாக்காளர்களை ஈர்க்கத் தீவிரமாக செயல்பட்டு வரும் அதே வேளையில், வெளிநாட்டு இந்தியர்களின் ஆதரவைப் பெறத் தேவையான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

உலகெங்கும் கிட்டத்தட்ட 18 மில்லியன் இந்தியர்கள் உள்ளனர்.

நாடாளுமனறத் தேர்தலில் இந்தியக் குடிமக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

இருப்பினும், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டுள்ள ‘ஓசிஐ’ அந்தஸ்து கொண்ட வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியர்களின் ஆதரவையும் பெற கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன.

இந்தியாவில் இருக்கும் இவர்களது உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருடன் இவர்களுக்கு இருக்கும் மிக நெருக்கமான உறவே இதற்குக் காரணம்.

நான்கு மில்லியனுக்கும் மேற்பட்டோர் ஓசிஐ அந்துஸ்து உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தங்கள் வாழ்நாளில் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்குச் செல்லலாம், இந்தியாவில் நிலம் வாங்கலாம், மற்ற முதலீடுகளைச் செய்யலாம்.

இவர்களால் இந்தியத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது.

குறிப்புச் சொற்கள்