சபரிமலை பக்தர்களுக்குப்புதிய கட்டுப்பாடு

2 mins read
96ef2168-a41d-464d-abd4-6e6ac9b708c5
சபரிமலையில் குவிந்திருந்த பக்தர் கூட்டம். - கோப்புப் படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: சபரிமலை பக்தர்களுக்கு திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இணையம்வழி முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே இனி சபரிமலை ஐயப்பனைத் தரிசிப்பதற்கு அனுமதிக்கப்படுவர் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்தது.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க வருகின்றனர்.

கடந்தாண்டு உடனடி தரிசன முன்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனால், கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிறார் முதல் பெரியோர் வரை சிக்கி சிரமத்துக்கு ஆளாகினர்.

மேலும், 15 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் தரிசனத்துக்கு காத்திருக்க நேரிட்டது. சில பக்தர்கள் மயங்கி விழுந்த சம்பவமும் நிகழ்ந்தது.

இதனால் பல பக்தர்கள் ஐயப்பனைத் தரிசிக்காமலேயே சொந்த ஊர் திரும்பினர்.

இந்தச் சம்பவங்கள் கேரள அரசாங்கத்துக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்தின.

கேரள உயர் நீதிமன்றமும் இதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் உயர் மட்ட ஆலோசனை குழுக் கூட்டம் தேவஸ்தானத் தலைவர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.

இதில், உடனடி முன்பதிவு முறை மூலம் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ய திரண்டது குறித்து விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான தலைவர் பிரசாந்த், “சபரிமலையில் கடந்த மண்டல, மகர விளக்குப் பருவங்களில் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் பட்ட அவதியை மறக்கமுடியாது.

“இதனைக் கருத்தில்கொண்டு, இனி வரும் காலங்களில் இணைய முன்பதிவு அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 80,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். உடனடி தரிசன முன்பதிவு முறை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது,” எனத் தெரிவித்தார்.

இதனால் நிலக்கல், பம்பை உள்ளிட்ட 10 இடங்களில் செயல்பட்டு வந்த உடனடி முன்பதிவு முகப்புகள் விரைவில் மூடப்படுகின்றன.

மண்டல, மகர விளக்குப் பூசைகளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே இணைய முன்பதிவு வசதியை ஏற்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
ஆலயம்