பள்ளிக்குத் தாமதம்: முதல்வர் - ஆசிரியை அடிதடி சண்டை

பள்ளிக்குத் தாமதம்: முதல்வர் - ஆசிரியை அடிதடி சண்டை

1 mins read
cb5fb93b-ea18-4afc-8cfb-55e1e0aa04f3
பள்ளி முதல்வரும் ஆசிரியை குஞ்சா சவுத்ரியும் சண்டையிட்டுக் கொள்கின்றனர். - படம்: ஊடகம்

ஆக்ரா: பள்ளிக்கு அடிக்கடி தாமதமாக வருவது குறித்து நடந்த வாக்குவாதத்தில் பள்ளி முதல்வரும் ஆசிரியையும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் காணொளியாக இணையத்தில் பரவி வருகிறது.

“பள்ளிக்கு பாடம் கற்க மட்டும் மாணவர்கள் வருவதில்லை. இதர நற்பண்புகளையும் கற்றறியும் நோக்கோடுதான் அவர்கள் பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர். மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய ஆசிரியர்களே இப்படி மோசமாக நடந்துகொள்வது அதிர்ச்சியூட்டுகிறது,” என பெற்றோர் பலர் தெரிவித்துள்ளனர்.

ஆக்ராவின் சீகானா கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

பள்ளிக்குத் தாமதமாக வந்ததற்காக ஆசிரியை குஞ்சா சவுத்ரியை பள்ளி முதல்வர் கண்டித்த நிலையில், “தாங்களும் அப்படித்தானே தொடர்ந்து தாமதமாக வருகிறீர்கள்,” என ஆசிரியை திருப்பிக் கேட்டுள்ளார்.

இப்படி இருவரிடமும் வெடித்த மோதல், கடும் வாக்குவாதமாக முற்றி கைகலப்பாக மாறியது. இவ்விவகாரம் தொடர்பில் பள்ளி முதல்வரும் ஆசிரியையும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே கல்வி அதிகாரிகளும் தங்கள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். பள்ளி முதல்வர் - ஆசிரியை என இருவர்மீதும் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
மாணவர்