பெங்களூரு: பணிப்பெண் கடத்தப்பட்ட வழக்குத் தொடர்பில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடாவின் மகனும் ஜேடிஎஸ் எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணாவை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர்.
இவர், ஆபாசக் காணொளி வழக்குத் தொடர்பில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையுமாவார்.
தனது மகன் பிரஜ்வல்மீது பாலியல் புகார் கூறியதற்காக, தனது வீட்டின் முன்னாள் பணிப்பெண்ணைக் கடத்தியதாக ரேவண்ணா மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் தனது தாய் கடத்தப்பட்டதாக, அப்பணிப்பெண்ணின் மகன் அளித்த புகாரை அடுத்து வழக்குப் பதிவானது.
கடத்தப்பட்ட பெண்ணைத் துரிதகதியில் தேடிக் கண்டுபிடித்துள்ள காவலர்கள், அவர் விரைவில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் முன்பாக முன்னிலையாகி நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கமளிப்பார் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆபாசக் காணொளிகள் வழக்குத் தொடர்பாக ஜேடிஎஸ் எம்எல்ஏ எச்.டி.ரேவண்ணா, அதே கட்சியின் எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரின் இடைக்காலப் பிணை மனுக்களை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து எம்எல்ஏ ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.
பிரஜ்வல் சம்பந்தப்பட்ட ஏறத்தாழ 3,000 ஆபாசக் காணொளிகள் கர்நாடகத்தை அதிரவைத்த நிலையில், அவர் ஜெர்மனிக்குப் பறந்து சென்றுவிட்டார். அவரைப் பிடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.
இதனிடையே, பிரஜ்வல் பல பெண்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரம் தெரிந்திருந்தும் மாநிலக் காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்ணை மூடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்துள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளாா்.
தொடர்புடைய செய்திகள்
மகாராஷ்டிர மாநிலம், புனேவில் செய்தியாளா்களிடம் பேசிய நிா்மலா சீதாராமன், “பிரஜ்வலின் 3,000 ஆபாசக் காணொளிகள் அடங்கிய பென்டிரைவை வைத்துக்கொண்டு ‘வாக்கு’ அரசியலுக்காக ஓராண்டுகாலமாக காத்துக்கிடந்துள்ளது கர்நாடக காங்கிரஸ் அரசு,” என பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
“பென் டிரைவில் என்ன இருந்தது என்பது கர்நாடகா மாநில அமைச்சர்களுக்கு நன்றாகவே தெரியும். பெண்களின் பாதுகாப்பு பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஒக்கலிகா ஜாதி வாக்குகள் தங்களது கையை விட்டுப் போய்விடும் என்பதற்காகவே கர்நாடக காங்கிரஸ் அரசு பயந்துள்ளது. அதனால்தான் முதல்கட்டத் தேர்தல் முடிவடைந்த பின்னர் நடவடிக்கை எடுத்துள்ளது,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

