தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரசாரம் செய்ய பணம் இல்லாததால் தேர்தலில் இருந்து விலகிய காங்கிரஸ் வேட்பாளர்

2 mins read
c54ba461-e468-4508-9c33-eba7ee4325c0
தேர்தலில் இருந்து விலகிய காங்கிரஸ் வேட்பாளர் சுசிதா மொகந்தி. - படம்: ஊடகம்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஒருவர் தேர்தலில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தில் செலவழிக்கத் தன்னிடம் போதிய அளவில் பணம் இல்லாததால் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 13ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. அங்கு ஆளும் பிஜூ ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், ஒடிசாவின் புரி தொகுதியில் சுசிதா மொகந்தி என்பவர் காங்கிரஸ் வேட்பாளராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். ஆனால், திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு அவர் மின்னஞ்சலும் அனுப்பியுள்ளார்.

அதில், “புரி தொகுதியின் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நிதி வழங்காததால் எனது பிரசாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. கட்சி சார்பில் பணம் கொடுக்க விரும்பாமல், எனது சொந்தப் பணத்தில் தேர்தல் செலவு செய்யுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள்.

“மக்களிடம் பணம் வசூலித்து பிரசாரம் செய்துவந்தேன். அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததால் தேர்தலில் இருந்து விலகுகிறேன்.

“பாஜகவும் பிஜூ ஜனதா தளமும் பண மழையால் மக்களை நனைத்துள்ளன. எங்கும் செல்வம் கொட்டிக் கிடக்கிறது. ஆனால், என்னிடம் அதுபோல் பணம் இல்லாததால் போட்டியிட விரும்பவில்லை. நிதி பற்றாக்குறையால் எனது வாய்ப்பை திருப்பிக்கொடுத்துவிட்டேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

புரி தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செய்ய திங்கட்கிழமை கடைசி நாள். நாடாளுமன்றத் தேர்தல் வரும் 25ஆம் தேதி நடக்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்