லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்டிஏ) இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இங்கு இண்டியா கூட்டணியில் சமாஜ்வாடி 62 இடங்களிலும் காங்கிரஸ் 17 இடங்களிலும் திரிணாமூல் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
ஆம் ஆத்மி கட்சி இந்த முறை இண்டியா கூட்டணியின் உறுப்பினராகி விட்டதால் உ.பி.யில் போட்டியிடவில்லை. மாறாக அக்கட்சி சமாஜ்வாடி மற்றும் காங்கிரசுக்காக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
டெல்லியில் முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்த பிறகு 2014 மக்களவைத் தேர்தலில் உ.பி.யிலும் போட்டியிட்டது. அப்போது, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கெஜ்ரிவால், வாரணாசியில் என்டிஏவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்டார்.
இதன் முடிவில் பாஜகவின் மோடிக்கு 5,81,022 (56.37%) வாக்குகள் கிடைத்தன. அடுத்து வந்த கெஜ்ரிவால் 2,09,238 (20.30%) வாக்குகளை பெற்றார். உ.பி.யின் பிற தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் ஆம் ஆத்மி வைப்புத் தொகையை இழக்க நேரிட்டது.
இதேபோன்ற நிலை ஆம் ஆத்மி கட்சிக்கு நாட்டின் பிற மாநிலங்களிலும் ஏற்பட்டது. இதன் காரணமாக, அக்கட்சி 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் டெல்லி மற்றும் பஞ்சாப் தவிர பிற மாநிலங்களில் போட்டியிடவில்லை.
எனினும், 2022 உ.பி. சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் ஆம் ஆத்மி 380 தொகுதிகளில் போட்டியிட்டது. இதிலும் அக்கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. பல தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்தது.