மடிக்கேரி: இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மடிக்கேரி எனும் ஊரில் வியாழக்கிழமை (மே 9), மீனா எனும் 16 வயதுச் சிறுமியுடன் பிரகாஷ் எனும் 32 வயது ஆடவருக்குத் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிகாரிகள் அதை நிறுத்தியதை அடுத்து, மீனாவின் தலையைத் துண்டித்த பிரகாஷ் அதனுடன் அங்கிருந்து தப்பியோடியதாகக் காவல்துறை கூறியது.
மீனா அண்மையில்தான் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை எழுதினார். பதின்ம வயதுச் சிறுமியான அவருக்குச் சட்டவிரோதமாகத் திருமண ஏற்பாடு செய்யப்படுவது குறித்து குழந்தைநலத் துறைக்கு யாரோ புகாரளித்தனர்.
அதையடுத்து நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்குச் சென்ற அதிகாரிகள், சிறுமியின் வயதைக் காரணம் காட்டி நிகழ்ச்சியை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.
பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் அதற்கு ஒப்புக்கொண்டு, மீனாவிற்கு 18 வயதான பிறகு திருமணத்தை நடத்த முடிவெடுத்தனர்.
ஆனால் சில மணி நேரம் கழித்து மீனாவின் வீட்டிற்குள் புகுந்த பிரகாஷ் மீனாவின் பெற்றோரைத் தாக்கினார். பின்னர் மீனாவை வீட்டுக்கு வெளியே 100 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்ற அவர், சிறுமியின் தலையைத் துண்டித்தார். துண்டித்த தலையுடன் அவர் தலைமறைவானதாகக் கூறப்பட்டது.
காவல்துறை சிறப்புப் பிரிவை அமைத்து அவரைத் தேடிவருகிறது.

