அமராவதி: மே 13ஆம் தேதி (திங்கட்கிழமை) ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் 175 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
இந்தத் தேர்தல்களுக்கான பிரசாரம் சனிக்கிழமை (மே 11) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
பிரசாரம் ஓய்வதற்கு முன்னர் அம்மாநிலத்தில் உள்ள கட்சிகளும் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கர்னூலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில முதலமைச்சரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டதாக ‘தினத்தந்தி’ நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.
“சந்திரபாபு நாயுடு இரட்டை வேடம் போடுகிறார். ஒருபக்கம் முஸ்லிம்களுக்கு 4 விழுக்காடு இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாகக் கூறிவரும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொள்கிறார். மறுபக்கம் தான் சிறுபான்மையினரின் நண்பன் என்று கூறிக்கொள்கிறார்,” என்று ஜெகன் மோகன் பிரசாரத்தில் தெரிவித்ததாக ‘தினத்தந்தி’ குறிப்பிட்டது.
“ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவில் 4 விழுக்காடு முஸ்லிம் இட ஒதுக்கீடு தொடரும். இந்த தேர்தல் எம்.பி.க்களையும், எம்.எல்.ஏக்களையும் தேர்வு செய்யும் தேர்தல் அல்ல. எதிர்காலத்தை நினைவில் கொண்டு மக்கள் நலத் திட்டங்களை யார் சரியாக செயல்படுத்துவார்களோ அவர்களுக்கு முடிசூடும் தேர்தல். சந்திரபாபு நாயுடுவுக்கு வாக்களித்தால், நலத் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் ஆகிவிடும்,” என்று ஜெகன் மோகன் கூறியதாக ‘என்டிடிவி’ குறிப்பிட்டது.
“சந்திரபாபு நாயுடு 14 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார். ஏழைகளுக்கு என எந்த ஒரு நலத் திட்டத்தையும் அவர் வகுக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஆந்திராவில் சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி வளர்ச்சிக்கான நலத் திட்டங்களை வீடு, வீடாக கொண்டு போய் சேர்த்துள்ளது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி,” என்று ஜெகன் மோகன் தெரிவித்தார்.

