புதுடெல்லி: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. அந்நாட்டின் பல மாநிலங்களில் வாக்களிப்பு கட்டங்கட்டமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயலின்மையால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை வெளிப்படையாக மீறி வருவதாக எதிர்க்கட்சிகள் குறைகூறுகின்றன.
தேர்தல் பிரசாரத்தின்போது சமய ரீதியில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் திரு மோடி பேசுவதாக அவை தெரிவித்தன.
விதிமுறைகளை மீறுபவர்கள் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராகச் சொல்லிக்கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையையும் எடுப்பதில்லை என்று காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஆணையத்திடம் மே 10ஆம் தேதியன்று புகார் கடிதம் அனுப்பியது.
“தேர்தல் ஆணையம் அதன் கடமையைச் செய்யத் தவறிவிட்டதால் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வெளிப்படையாக விதிமுறைகளை மீறுகிறது. தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது என்ற தைரியத்தில் அக்கட்சியினர் முறையற்ற வகையில் செயல்பட்டு வருகின்றனர்,” என்று எதிர்க்கட்சியினர் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளனர்.
தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவி ஏற்கும் இலக்குடன் தீவிரமாகப் பிரசாரம் செய்து வரும் திரு மோடி, வசதி குறைந்த, சிரமங்களை எதிர்நோக்கும் மற்ற பிரிவினரைப் புறக்கணித்துவிட்டு முஸ்லிம்களுக்கு மட்டுமே உதவி செய்ய காங்கிரஸ் கட்சி விரும்புவதாகக் கூறியிருந்தார்.
பிரதமர் மோடியின் இக்கருத்துகள் நாட்டு மக்களைப் பிளவுபடுத்தும் என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன
இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகளும் கருத்து தெரிவிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
தேர்தல் முடிவுகள் ஜூன் மாதம் 4ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

