பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ம.ஜ.த. எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3,000 ஆபாசக் காணொளிகள் சில நாள்களுக்கு முன்னர் வெளியானது.
அது கர்நாடகாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் 3 பெண்கள் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல், அவரது தந்தை ரேவண்ணா (66) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா காணொளிகள் குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்திவருகிறது.
இதனிடையே, பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பாஜகவைச் சேர்ந்த தேவராஜ் கவுடா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தான் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாசக் காணொளிகளை கசிய விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
பெங்களூரில் இருந்து சித்ரதுர்கா சென்ற தேவராஜ் கவுடாவை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பிரஜ்வலின் தந்தை ரேவண்ணாவை எதிர்த்து தேவராஜ் கவுடா பாஜக சார்பில் போட்டியிட்டார்.
33 வயது பிரஜ்வல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய நிலையில் அவரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.