கட்டுக்கோப்பான கட்சியை பாஜகவால் உடைக்க முடியவில்லை: கெஜ்ரிவால்

கட்டுக்கோப்பான கட்சியை பாஜகவால் உடைக்க முடியவில்லை: கெஜ்ரிவால்

1 mins read
f7a3fe71-2363-4cc8-add1-a85a0fab1dfd
தனது தாய், தந்தையர் காலில் விழுந்து ஆசி பெற்ற கெஜ்ரிவால். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசுகளைக் கவிழ்ப்பதற்கு பாஜக போட்ட திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டது. நான் கைதான பின் ஆம் ஆத்மியில் ஒற்றுமை அதிகரித்துள்ளது எனப் பேசியுள்ளார் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்.

திகார் சிறையில் இருந்து இடைக்காலப் பிணையில் வெளியே வந்துள்ள அவர், ஞாயிற்றுக்கிழமை தனது இல்லத்தில் கட்சி எம்எல்ஏக்களைச் சந்தித்துப் பேசினார்.

“திகார் சிறைக்குள் இருக்கும் ஊழியர்களும் பாதுகாவலர்களும் ஒவ்வொரு எம்எல்ஏவும் எப்படி செயல்பட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறித்து தகவல் கூறினார்கள். நான் இல்லாமல் போனதால் உங்கள் பணிக்கு ஏதாவது இடையூறு ஏற்படுமோ என்ற அச்சத்துடன் இருந்தேன். ஆனால், நீங்கள் அனைவரும் கட்டுக்கோப்பாக வேலை செய்து, கட்சியை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கிறீர்கள்,” என்றார்.

“நான் கைது செய்யப்படுவதற்கு முன்பு என்னைச் சந்தித்த பாஜக உறுப்பினர்கள், என்னைக் கைது செய்தபின்னர் நமது கட்சியை உடைத்து டெல்லி, பஞ்சாபில் ஆட்சியைக் கவிழ்த்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்களையும் பகவந்த் மானையும் தங்களுடன் அழைத்துச் செல்வோம் என்று கூறினர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக நீங்கள் அனைவரும் வலுவாக ஒன்றிணைந்து நின்றதால் கட்சியை சிதைக்க முடியவில்லை,” என்று மேலும் அவர் தெரிவித்தார்.

ஜூன் 2ஆம் தேதி நான் மீண்டும் சிறைக்குச் செல்லவேண்டும். இதுபோலவே எப்போதும் கட்சியை அனைவரும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்