புதுடெல்லி: ஒன்பது மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் இன்று திங்கட்கிழமை 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய ஒன்பது மாநிலங்கள், யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றில் உள்ள 96 தொகுதிகளில் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.
அச்சுறுத்தல் உள்ள வாக்குச் சாவடிகளில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டசபைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புலிவந்தலா தொகுதியிலும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியிலும் ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் பித்தாபுரம் தொகுதியிலும் களம் காண்கின்றனர்.
இதேபோல் ஒடிசா மாநில சட்டசபைக்கும் முதல்கட்டமாக 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு மொத்தம் 147 தொகுதிகள் உள்ளன.
முக்கிய வேட்பாளர்கள்
இந்த நான்காம் கட்ட மக்களவைத் தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள் பலர் போட்டியிடுகின்றனர். உத்தரப்பிரதேசத்தின் கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுப்ரதா பதக் களத்தில் உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மேற்குவங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் மஹுவா மொய்த்ரா, பாஜக சார்பில் அம்ரிதா ராய் போட்டியிடுகின்றனர். பகரம்பூரில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரர் யூசூப் பதான், காங்கிரஸ் சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பாஜக சார்பில் நிர்மல் சந்திர சகா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
பீகாரின் பெகுசராய் தொகுதியில் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கிரிராஜ் சிங் களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அவதேஷ் ராய் போட்டியிடுகிறார்.
தெலுங்கானாவின் ஹைதராபாத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுத்தீன் ஓவைஸியும் அவரை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை மாதவி லதாவும் களமிறங்கி உள்ளனர்.
50 தொகுதிகளில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாது
இதனிடையே ஒடிசா மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள பிரதமர் மோடி, “காங்கிரஸ் இத்தேர்தலில் 50 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிடும்,” எனக் கூறியுள்ளார்.
476 வாக்காளர்கள் கோடீஸ்வரர்கள்
4ஆம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் 360 வேட்பாளர்கள்மீது குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் இவர்களில் சிலர்மீது கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், 476 வாக்காளர்கள் கோடீஸ்வரர்களாகவும் 24 பேரிடம் சொத்துகள் ஏதுமில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை மூன்று கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், நான்காம் கட்ட வாக்குப்பதிவு 96 தொகுதிகளில் இன்று மே 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நான்காம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தனிப்பட்ட விவரங்களை அறிக்கையாக ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இத்தேர்தலில் போட்டியிடும் மொத்தம் 1,710 வேட்பாளர்களில் 360 பேர்மீது அதாவது 21 விழுக்காட்டினர்மீது குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் 274 பேர் மீது கடும் குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
17 பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 வேட்பாளர்கள் மீது கொலை, கொள்ளை வழக்குகளும் 50 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மேலும் 5 வேட்பாளர்கள் மீது பாலியல் வன்முறை வழக்குகளும் உள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
பாரத் ராஷ்டிர சமிதியின் 10 பேர், காங்கிரஸ் கட்சியின் 35 பேர், பாஜகவின் 40 பேர், தெலுங்கு தேசம் கட்சியின் 9 பேர், ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் 12 வேட்பாளர்கள் மீது அதிக அளவில் குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.
இதைத்தவிர 1,710 வேட்பாளர்களில் 476 பேர் ரூ.1 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள கோடீஸ்வரர்களாக உள்ளனர். 24 வேட்பாளர்கள் தங்களிடம் சொத்து ஏதும் இல்லை என்று அறிவித்துள்ளனர் என்று அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

