விஜயவாடா: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் விஜயலட்சுமி தனது மகள் ஷர்மிளாவுக்கு வாக்களிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
சனிக்கிழமை மாலை 6 மணியுடன் ஆந்திர மாநிலத் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், ஜெயலட்சுமி காணொளி ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார். அதில், “கடப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் உங்கள் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளாவுக்கு உங்களது பொன்னான வாக்குகளை அளித்து மாபெரும் வெற்றியடையச் செய்யுங்கள்,” என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆந்திராவில் 175 சட்டசபைத் தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கும் அவரது தாயார் விஜயலட்சுமி, தங்கை ஷர்மிளாவுக்கும் இடையே சில ஆண்டுகளாக மனக்கசப்பு இருந்து வரும் நிலையில், தாய், தங்கை இருவரும் ஜெகன்மோகன் வீட்டிலிருந்து வெளியேறி ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர்.
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக பதவி வகித்து வரும் ஷர்மிளா, அனைத்து மேடைகளிலும் தனது சகோதரர் ஜெகன்மோகனின் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்கியதில்லை என்று கூறப்படுகிறது.