ஜெய்ப்பூர்: இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் இமாம் ஒருவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் வயது குறைந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அஜ்மீரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் சமயப் பணிகளில் ஈடுபட்டு வந்த 32 வயது மௌலானா முகம்மது மஹீர், மாணவர் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்குப் பழிதீர்க்கும் வகையில் ஆறு மாணவர்கள் அவரை ஏப்ரல் 27ஆம் தேதியன்று கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த இளையர்களைக் காவல்துறையினர் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்த மஹீரின் கைப்பேசியும் அவரது கழுத்தை நெரித்துக் கொல்ல பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கயிறும் பறிமுதல் செய்யப்பட்டன.
முகமூடி அணிந்த மூவர் மஹீரைக் கொன்றதாகவும் அதுகுறித்து யாரிடமும் பேசக்கூடாது என்றும் அவர்கள் தங்களை மிரட்டியதாகவும் கடந்த 15 நாள்களாக அந்த மாணவர்கள் அனைவரிடமும் தெரிவித்து வந்தனர்.
கண்காணிப்பு கேமராக்களைச் சோதனையிட்டபோது மாணவர்கள் கூறியதுபோல எதுவும் நடக்கவில்லை என்று தெரியவந்தது.
மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அஜ்மீர் காவல்துறையைச் சேர்ந்த கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் பிஷ்னோய் கூறினார்.
இஸ்லாமிய சமயப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவரை மஹீர் அடிக்கடி பாலியல் ரீதியிலாகத் துன்புறுத்தியதால் அந்த ஆறு மாணவர்களும் அவரைக் கம்பால் அடித்ததுடன் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொன்றதாக திரு பிஷ்னோய் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மஹீரைக் கம்பால் அடிப்பதற்கு முன்பு அவர் குடிக்க இருந்த தயிரில் மாணவர்கள் தூக்க மாத்திரைகளைக் கலந்ததாகவும் மஹீர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது தாக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.

