தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

4ஆம் கட்டத் தேர்தல்: மேற்கு வங்கத்தில் கொலை; ஆந்திராவில் வாக்கு இயந்திரம் உடைப்பு

3 mins read
c46b7be4-bcfe-4b96-9371-52bc059abd1b
ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் மே 13 நடந்த 4ஆம் கட்டத் தேர்தலில் வாக்களிக்க வரிசை பிடித்து நிற்கும் மக்கள். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 தொகுதிகளில் நேற்று (13.05.24) மக்களவைத் தேர்தலுக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆந்திரா மற்றும் ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பும் நடந்தது.

பீகார் (5 தொகுதிகள்), உத்தரப் பிரதேசம் (13 தொகுதிகள்), மேற்கு வங்கம் (8 தொகுதிகள்), ஆந்திரா (25 தொகுதிகள்), ஜார்க்கண்ட் (4 தொகுதிகள்), மத்தியப் பிரதேசம் (8 தொகுதிகள்), மகாராஷ்டிரா (11 தொகுதிகள்), ஒடிசா (4 தொகுதிகள்), தெலுங்கானா ( 17 தொகுதிகள்), ஜம்மு காஷ்மீர் (1 தொகுதி) உட்பட ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று (மே 13) வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

ஒன்பது மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் மொத்தம் 1,717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை நடந்த 4ஆம் கட்ட வாக்குப்பதிவில் ஆந்திராவில் ஒரு வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திராவில் மோதல்; வாக்கு இயந்திரம் உடைப்பு: ஆந்திராவில் சித்தூர், கடப்பா, அனந்தபூர் உட்பட பல இடங்களில் வாக்குச் சாவடிகளில், ஒய்.எஸ்.ஆர் மற்றும் தெலுங்கு தேசக் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரண்டு கட்சிக்காரர்களும் ஒருவருக்கொருவர் கற்களை எறிந்து கொண்டதோடு அடிதடியிலும் இறங்கி வன்முறையில் ஈடுபட்டனர்.

அதையடுத்து, வாக்குச் சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த கட்சிக்காரர்கள், அங்கிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கினர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கள்ள வாக்கு பதிவு செய்ய முயன்றதாகக் கூறி, இரு கட்சித் தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டனர். அதையடுத்து அங்கு காவலர்கள் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மேற்கு வங்கத்தில் கொலை: மேற்குவங்க மாநிலத்தில் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள கேதுகிராமில் நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு திரணாமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் கொல்லப்பட்டார். முன்பகை காரணமாகக் கொல்லப்பட்டார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலத்தின் துர்காபூரில் பா.ஜ.க, மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மேற்கு வங்கம் பீர்பும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வெளியே இருந்த தங்களது கடையை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் சேதப்படுத்தியதாக பா.ஜ.க,வினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

4ஆம் கட்டத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 4,500 தமிழக காவல்துறையினரும், 1,614 முன்னாள் ராணுவத்தினர் உட்பட ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், 66.14 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. 2 ஆம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி 88 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது. இதில், 66.71 விழுக்காடு வாக்குகள் பதிவானது. 3 ஆம் கட்டத் தேர்தல் 93 தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி நடத்தப்பட்டது. அதில், 65.68 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

குறிப்புச் சொற்கள்