அகர்தலா: இந்தியாவின் திரிபுராவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய 8 பங்ளாதேஷியர்களை காவல்துறை கைதுசெய்தது. அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டதாக இந்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தின் எல்லைப் பகுதிகளில் இந்தியாவின் திரிபுரா, மேகாலயா, மிசோரம், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளன. பங்ளாதேஷில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக ஊருவும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. அவ்வகையில் இதுவரை கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கு மேற்பட்ட வங்கதேச மக்கள் இந்தியாவுக்கு குடியேறி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை திரிபுரா தலைநகர் அகர்தலா ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த பங்ளாதேஷை சேர்ந்த 7 பெண்கள் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பங்ளாதேஷில் இருந்து வந்தவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட திரிபுராவை சேர்ந்த செந்து குமார் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து அகர்தலா ரயில்வே காவல்துறை அதிகாரி தபஸ் தாஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பங்ளாதேஷின் கோமிலா பகுதியில் இருந்து 8 பேரும் திரிபுராவின் சோன்புரா பகுதிக்குள் ஊடுருவி உள்ளனர். அவர்களுக்கான தங்குமிடம், உணவு வசதிகளை செந்து குமார் என்ற இந்தியர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
“சோன்புராவில் இருந்து அகர்தலாவுக்கு 8 பேரும் வாகனத்தில் வந்துள்ளனர். அகர்தலாவில் இருந்து மும்பைக்கு ரயிலில் செல்லத் திட்டமிட்டு இருந்தனர். உளவுத் துறையின் தகவலின்பேரில் 8 பேரையும் கைது செய்துள்ளோம்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

