தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராட்சத விளம்பரப் பலகை சாய்ந்ததில் 14 பேர் மரணம்; காவல்துறை வழக்குப்பதிவு

2 mins read
e25090d0-9c6e-4e73-bf76-52fc9b2df637
சாலையோரம் வைக்கப்பட்ட பெரிய விளம்பரப் பலகை அங்கிருந்த சில வீடுகள், பெட்ரோல் நிலையம் மீது விழுந்தது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

மும்பை: இந்தியாவின் மும்பை நகரில் கனமழை காரணமாகப் பெரிய விளம்பரப் பலகை ஒன்று விழுந்தது. இதில் 14 பேர் மாண்டதாகவும் குறைந்தது 75 பேர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கனமழை பெய்ததுடன் பலத்த காற்று வீசியதை அடுத்து, மும்பையின் கிழக்குப் பகுதியில் உள்ள காட்கோப்பர் குடியிருப்பு வட்டாரத்தில் மே 13ஆம் தேதியன்று இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இதையடுத்து, விளம்பரப் பலகையின் உரிமையாளருக்கு எதிராக மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

வாகனங்களும் பாதசாரிகளும் அதிகம் பயன்படுத்தும் சாலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த 70 மீட்டர் நீளம், 50 மீட்டர் அகலம் கொண்ட விளம்பரப் பலகை அங்கிருந்த சில வீடுகள், ஒரு பெட்ரோல் நிலையம் மீது சாய்ந்தது.

சாய்ந்த விளம்பரப் பலகைக்கு அடியில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

“காயமடைந்தவர்களில் 44 பேருக்கு மருத்தவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 31 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிவிட்டனர். விளம்பரப் பலகை விழுந்ததில் துரதிர்ஷ்டவசமாக 14 பேர் மாண்டுவிட்டனர். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்போரைத் தேடி மீட்கும் பணிகள் தொடர்கின்றன,” என்று மும்பை நகராட்சி மன்றம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

விளம்பரப் பலகை பெட்ரோல் நிலையம் மீது விழுந்திருப்பதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் தேசிய பேரிடர் நடவடிக்கைப் படையின் திரு கௌரவ் சௌகான் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“தீப்பற்றிக்கொள்ளும் அபாயம் இருப்பதால் எங்களிடம் உள்ள பல சாதனங்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இடிபாடுகளை அகற்ற மட்டுமே பாரந்தூக்கிகளைப் பயன்படுத்துகிறோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்